திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-5

கோயில்களில் நாம் மண்டபங்களின் மேல்புறத்தில், கொடுங்கையில் வரிசையாக பொம்மைகள், உருவங்கள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். பூத கணங்களாக, விகார உருவங்களுடன், மோசமான செய்கைகளுடன்…
ஆனால்… அத்தகைய விகார ரூபங்களையும் கண்டு, குப்பைகளைக் கடந்து குணக்குன்றை அடைவதுபோல், அவற்றைக் கடந்து, அழுக்குகளை மனத்தில் இருந்து அகற்றி, தெள்ளிய மனத்துடன் பெருமானைக் காணச் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுரை நல்குவர்.
அன்று அத்தகைய நிலையை என் மனதும் அனுபவித்தது. ஏகாதசி காலை நேரம் தாயார் சந்நிதியை ஒட்டிய வடக்குவாசல் பகுதிக்குச் சென்ற போது, பெரியவர்கள், வயதானவர்கள், பெண்மணிகள் என எத்தனையோ பேர் ஆயிரங்கால் மண்டபம் செல்ல வேண்டும், இது எங்கள் வழக்கமான பாதை…. என்று மன்றாடிக் கொண்டிருக்க, காவலர்கள் தடுத்து நிறுத்தி விரட்டிக் கொண்டிருந்தனர். டி.எஸ்.பி., கந்தசாமி ஒரு படி மேலே போய்… மனுசனா இருந்தா சொல்லுறது மண்டைல ஏறும்… நீங்கள்லாம் மனுசங்களா என்று கேட்ட போது… என் மண்டைக்குள்ளும் ஜிவ் என்று ஏறியது! அங்கே நின்றிருந்தவர்களில் பலர், பெரிய பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். சிலர் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்… அவர்கள் எவரும் குறுக்கு வழியை நாடவில்லை! பாரம்பரிய உரிமையைக் கோரினார்கள்… அவ்வளவே!
ஐயா கந்தசாமி பற்றி விசாரித்தேன் நட்பு வட்டங்களிடம்! விராலிமலை இன்ஸ்பெக்டராக இருந்து ஓரிரு பிரச்னைகளில் சிக்கி, சில இடங்களுக்கு மாற்றப்பட்டு, இப்போது தூத்துக்குடியில் டி.எஸ்.பியாக இருந்து, கோயில் பாதுகாப்புக்கென சிறப்பு பணி நிமித்தம் அனுப்பப் பட்டுள்ளார்.
எனக்கு எவர் மீதும் தனிப்பட்ட விரோதம் இருந்ததில்லை. ஸ்ரீராமானுஜ மார்க்கம் காட்டிய வழியில், மனிதர் எவரையும் நான் வெறுப்பதில்லை; அவர்களின் தனிப்பட்ட குணங்களை, செயல்களை மட்டுமே வெறுத்து அப்போதைய நிலையில் ஒதுக்கி (ஒதுங்கி) விடுவேன். பல்வேறு சூழ்நிலைகளில் எனக்கு பாதகம் செய்தவர்களே அதிகம்! ஆனாலும் அவர்கள் மீது விரோதம் பாராட்டியதில்லை; அப்போதைக்கு அதை சுட்டிக் காட்டி விமர்சித்து ஒதுங்கிவிடுவேன்! அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மாற்றிக் கொண்டால், மீண்டும் அவர்களுடன் தொடர்பு புதுப்பிக்கப்படும்!
ஆக, திருவாளர் கந்தசாமிக்கும் என் நட்பு வட்டம் மூலம் கொடுத்த செய்தி… இங்கே காட்டிய வீரத்தை ஐயா தூத்துக்குடியில் இன்னும் பல மடங்கு காட்டுங்கள் என்பதே! செத்த பாம்பை அடித்த வீரனாக, அப்பாவி மக்களை விரட்டி பேர் வாங்கிக் கொள்ளாதீர்கள் என்பதே! ஆம்பூரில் அடி வாங்குவீர்கள்; திருவரங்கத்தில் தீரம் காட்டுவீர்கள்! அதானே!
திருவரங்கம் மிகப் பெரும் கோயில். இதுவரை நெரிசல் நெருக்கடி என்று எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை! கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் மனித ம(இ)னத்தைச் சேர்ந்தவர்கள்தான் கோயிலுக்கு வருகிறார்கள். கொள்ளிடத்தைப் போல் பெரிய கோயில்! கம்பு கட்டி வரிசையாக போக ஏற்பாடு செய்து, உதவிக்கு ஒரு நூறு காவலர்கள் இருந்தாலே போதுமானது!
கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள், உள்ளூர் தொண்டர்கள் ஆகியோரை அந்த ஓரிரு நாட்களுக்கு உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். இத்தனைக் காலமும் இப்படித்தான் நடந்தது. பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்த காலத்தே, இதே பாதுகாப்புப் பணியில் என்.எஸ்.எஸ் மூலம் அடியேனும் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது இருந்த பக்தர் கூட்டம் குறைவின்றி இப்போதும் இருக்கிறது. ஆனால்… கோயில் முழுமையும் காவல்துறைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஊரில் உள்ள மக்களையும் தொந்தரவு செய்து, நீ அந்த தெரு வழியே போகக் கூடாது, இங்கே வண்டியை நிறுத்தக் கூடாது, இங்கே செல்லக் கூடாது, இங்கே வரக்கூடாது என்று கட்டளை போட்டு… இதெல்லாம் தேவையற்றது.
***
இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கிறதே… நண்பர் இணை ஆணையர் ஐயா ஜெயராமன் எங்கிருக்கிறார் பார்ப்போமே என்று தேடிப் பார்த்தேன். ம்ஹும்.. ஆளையே காணோம்… அலுவலகம் பூட்டப் பட்டிருந்தது. வரிசையாக எல்லா அறைகளும் இழுத்து மூடப்பட்டு இருள் கவிந்து கிடந்தது. பாவம்… என்ன நெருக்கடியோ? ஏன் இந்தப் பிக்கல் பிடுங்கல் என்று மூன்று நாளாக கோயில் பக்கமே எட்டிப் பார்க்கவில்லையாம். ஒரு வேளை அவரும் வெகுஜன வேஷம் கட்டி மஃப்டியில் வந்தாரோ என்னவோ? அப்படித்தான் அடியேனும் எண்ணவோ? தெரியாது.
இந்த லட்சணத்தில் கும்பாபிஷேகத்தில் முன்னணியில் இருந்த பெரும்புள்ளி ஒருவர், ஏகாதசீ விழா பாதுகாப்புக்கு பத்தாயிரம் போலீஸார் வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தாராம்… உள்ளூர்வாசிகள் பேசிக் கொண்டார்கள்.
***
சினிமா டிக்கெட் ப்ளாக்கில் வாங்கி கேள்விப் பட்டிருப்போம்… ரசிகர்கள் அடிதடி போட்டு முதல் நாள் முதல் ஷோவைப் பார்த்துவிட வேண்டும் என்று எவ்வளவு வேண்டுமானும் காசு கொடுத்து பார்த்துவிடுவதுபோல்!
இங்கே, “சொர்க்கத்துக்கு போக ரூ. 10 ஆயிரம்” என ஏலம் போயிருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பரமபத வாசல் திறப்புக்கு ரூ.3 ஆயிரம் என வசூலித்து டிக்கெட் கொடுத்து, அவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்திருந்தார்கள். ஆனால்… முன்பேயே டிக்கெட் வாங்கி வைத்து, அதை ரூ.10 ஆயிரத்துக்கு சிலர் பிளாக்கில் விற்றதாகவும், ரூ. 250 டிக்கெட்டை ரூ. 2 ஆயிரம் வரை விற்றுத் தீர்த்ததாகவும் நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.
காசு கொடுத்து கடவுளை தரிசிக்கும் கொள்கைக்கு முரணானவன் என்பதால், இதன் உண்மைத் தன்மையை நேரில் அனுபவித்து உணர்ந்திலேன். முன்பெல்லாம் இவ்வாறு செல்வதை அருங்காட்சியகத்தில் காசு கொடுத்து சிலைகளை ரசித்துப் பார்க்கும் உணர்வுதான் எழுகிறது என்று குறிப்பிட்டேன்…. இப்போது ரிலீஸாகும் சினிமா ரேஞ்சுக்கு ஒப்பிட வேண்டியிருக்கிறது போலும்!
ஆக… இந்த கலெக்‌ஷன் எல்லாம் யார், யாருக்காக, யாரை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்டது என்பது அந்த அரங்கனுக்கே வெளிச்சம்! அரங்கன் வெறுமனே துயில் கொண்டிருப்பதாக இத்தகையவர்கள் எண்ணக் கூடும். ஆனால், அவன் யாரை எப்படி எப்போது தூண்டிவிட்டு, இத்தகையவர்களுக்கு அடி கொடுப்பான் என்பது யாருக்கும் தெரியாது!
***
ஆக… திருவரங்க வைகுண்ட ஏகாதசித் திருவிழா குறித்த இந்த ஐந்து பதிவுகளின் முடிவில் எனக்குத் தோன்றுவது… நம் முக்கியப் பண்டிகைகளைக் குலைக்க சதி நடக்கிறது. கோயில்களுக்கு வெகு ஜனங்கள்/ பாமர மக்கள் வருவதைக் குறைக்க சதி நடக்கிறது. போலீஸாரைக் குவித்து கோயிலை சீல் செய்துவிட முனைப்பு காட்டுவது தெரிகிறது. இதற்கு சில பெரும் பணக்கார வர்க்க, அதிகார வர்க்கம் உடந்தையாக இருப்பது தெரிகிறது. தங்கள் சொந்தபந்தங்கள், காசு கொடுத்து கடவுளைப் பார்ப்பவர்கள் வசதிக்காக, வெகுஜனங்களை விரட்டி விடும் முனைப்பு தெரிகிறது!
கடந்த சில வருடங்களாக இதே நிலை! இது நீடித்தால்… நிச்சயம் ஓர் எழுச்சி ஏற்படும். எதற்கும் ஒரு எல்லை உண்டு; முடிவு உண்டு #மக்களே!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.