
கலெக்சன், கமிஷன், கரெப்ஷன்… என அரங்கனிடம் மோதும் அறநிலையத்துறை .
*
முக்கியமாக – பெருமாளுக்கான நிவேதனம் குறித்த புகார்கள். சில வருடங்களுக்கு முன்னர் மெத்தப் படித்த இளைஞர் இருவர் தாம் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, பெருமாளுக்கான தளிகை தயாரிப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்களென செய்திகள் வந்ததைப் பார்த்தோம். பல்வேறு தொல்லைகளால் அவர்கள் பின்னர் இந்தப் பணியில் இருந்து வெளியேறியதையும் கேள்விப் பட்டோம்…
ஒரு முறை பெருமாளின் பெரிய அவசர தளிகையின் போது, ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் போட்டு, அந்தக் கூடை வெறும் கூடை எனச் சொல்லி அது ஒரு பிரச்னையானதும் நமக்குத் தெரியும்.
ஆனால் தற்போது நடப்பது பெருங்கூத்து. அரங்கத்துக்கே அடுக்காது. இது குறித்து அரங்கன் ஆலயத்தில் சிலரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அடுக்கடுக்காக புகார்களைக் கொட்டினார்கள்.
அதிலிருந்து, வெகுகாலமாகவே, ஸ்ரீரங்கத்தில் பெருமாள் தளிகைக்கான பிரசாத தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகளும் அனாசாரங்களும் மிகுந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.
கோயிலில் பெருமாளுக்கான அமுது செய்வித்தலுக்கு என்று ஒரு மடைப்பள்ளியும் வெளியில் விற்கப்படும் பிரசாதங்களுக்கு என ஒரு மடைப்பள்ளியும் செயல்படுகிறது. கடந்த வருடம் இந்த மடைப்பள்ளியில் சென்று பார்த்தேன். பெரிய விசாலமான இடம். இதில் இங்கேயே வைத்து தயாரிக்கப்படும் பிரசாதங்கள் தான் பெருமாளுக்கு அமுது செய்விக்கப் படும். ஆனால் கோயில் நிர்வாகம் இப்போது அனைத்தையும் ஒன்றாக்கி, கோடிக்கணக்கில் ஏலம் விட்டு, பெருமாள் ஆராதன தளிகையையும் காண்ட்ராக்டர் வசமே விட்டுள்ளது. உள்ளூர் பிரமுகர்கள் பெயரில் காண்ட்ராக்ட் எடுத்து, தங்கள் இஷ்டம் போல் இந்த ஏலதாரர் குளறுபடி செய்வதாக குற்றம் சொல்கிறார்கள்.
ஆசார அனுஷ்டானங்களுடன் பெருமாள் தளிகை தயார் செய்யப் பட்ட காலம் போய், இப்போது எவரெல்லாமோ வெளியிலே தயார் செய்து கொண்டு வந்து மடைப்பள்ளி வழியாக பெருமாளுக்குப் போகிறது என்கிறார்கள். முக்கியமாக அங்கே பணி செய்யும் சில பெண்மணிகள் கூட பிரசாத தளிகையைத் தொட்டு கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்வதையும் சங்கடத்துடன் சொன்னார் ஒருவர்.
படியளக்கும் பெருமாளான அரங்கன் பெயரில் தரமான அரிசி, நெய், பொருள்கள் தேவஸ்தானத்தால் வழங்கப் பட்ட போதிலும், ஏலதாரர் அவற்றில் முறைகேடு செய்து, பிரச்னை வரும் போது உரியவர்களுக்கு கமிஷன் தொகையைக் கொடுத்து விஷயத்தை அத்தோடு முடித்து விடுகிறார்கள், ஒரே ஏலதாரர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய கோயில்களில் மடைப்பள்ளி ஏலம் எடுத்திருக்கிறார். அதன் மூலம் எக்கச்சக்கம் கமிஷன்கள் மேலிடம் வரை செல்வதால் எவரும் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகிறார் அங்கே முன்னர் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்து வந்தவர்.
இதில் மிகக் கேவலமான விஷயம், சமையல், சாப்பாடு என ஊர் சுற்றி வீடியோ பதிவு போடும் யூடியூபர்களுக்கு பணம் கொடுத்து, இங்குள்ள தளிகையைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து போட வைக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டு..!
மடைப்பள்ளிப் பணிக்கு ஏழெட்டு பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஓரிவரை வைத்து அவசர கதியில் நெருக்கடியில் பிரசாதம் தயாரிப்பதால் தாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை சமாளிக்க வெளியில் வர்த்தக ரீதியில் தயாரிக்கப் படும் இடத்தில் இருந்து ஆகம விரோதமாக பெருமாள் அமுதுக்கு பிரசாதம் வாகனங்களில் கொண்டு வரப்படுவதும் நடக்கிறது, இது மிகப் பெரும் பாவம். நம்பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளியிருந்த போது, அவருக்கு நிவேதிக்க, தனியார் மண்டபத்தில் இருந்து மைசூர் பா ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கிய கொடூரமும் நடந்தது. இப்படியாக, படியளக்கும் பெருமாளை பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று மனம் குமுறினார் அந்த நண்பர்.
25 வருடங்களுக்கு முன் எங்கள் ஊர் கிருஷ்ணன் சந்நிதி கும்பாபிஷேகத்தின் போது, மலையாளத்தவர்களை வைத்து பிரச்னம் பார்த்தார்கள். அவர் தெளிவாகச் சொன்னார்… கிருஷ்ணனுக்கு நிவேதனமே முறையாக ஆகவில்லை. அவர் பட்டினியில் கிடக்கிறார். கோயில் அர்ச்சகர் தன் வீட்டில் நிவேதனம் செய்து தெரு வழியாக எடுத்து வருகிறார். அதில் துர்தேவதைகள் எச்சில் பட்டு விடுவதால், கிருஷ்ணனுக்கு நிவேதனம் ஆவதில்லை. எனவே மடப்பள்ளியில் இனி முறையாக செய்து நிவேதனம் செய்யுங்கள் என்று ஒரு கருத்தைச் சொன்னார்.
பொதுவாக எந்த சந்நிதியானாலும், அந்த தெய்வத்துக்குரிய பிரசாதங்களை அருகிலேயே தூய்மையாக தயாரித்து நிவேதனம் செய்வது தான் ஆகமப்படி சரியானது. வெளியிடங்களில் தயாரித்துக் கொண்டு வரும் போது துர்தேவதைகளில் எச்சில் பட்டுவிடுவதால், மூல தெய்வத்துக்கு அந்த பிரசாதம் நிவேதனம் ஆகாது. அதனால் மூல மூர்த்தியை பட்டினி போடுவதாகும். இந்தக் கொடுஞ்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரங்கன் கோயில் நிர்வாகம் மீண்டும் தகுதியான நபர்களை நியமித்து மடைப்பள்ளியை தனித்து இயங்கச் செய்ய வேண்டும்.
திருப்பதியைப் போல் திருவரங்கத்தில் தரிசன நேரத்துக்காக பூஜை நேரங்களை வசதிக்குத் தக்க மாற்ற முடியாது என்பது இந்தக் கோயில் விதி.
அதிகாலை கதிரவன் குண திசை சிகரம் வந்தணைந்தான் என்று சூரிய உதயம் ஆனதை வைத்துத்தான், திருப்பள்ளியெழுச்சி சேவை இங்கே நடக்கும். அதை அதிகாலை 5 மணிக்கு எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது என்று பெரியவர்கள் முன்பே வழிகாட்டியிருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் கோயிலில் ஜீயரும் இன்னும் நியமனமாகவில்லை. இந்த நிலையில் கோயில் அர்ச்சகர்களுக்கும் ஸ்தலத்தாருக்கும் இடையே மனவேற்றுமைகளும் விரிசலும் அதிகரித்துள்ளதால், தகுந்த பெரியோர் தலையிட்டு, இரு தரப்பாரையும் பேச வைத்து, பஞ்சாங்க படனம், வேத விண்ணப்பம், பூஜை நேரங்கள் இவற்றை நேரப்படி வகுத்து, அதை மீறாமல் செய்ய அரங்கன் திருமுற்றத்தே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2004ல் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருந்த போது என்னிடம் திருவாராதனக் கிரமங்கள் பற்றி கேட்டார். அவருக்கு திருவாராதனத்தின் தாத்பரியம், ஆசனங்கள் இவை குறித்து ஆர்வமாகச் சொன்னேன். அப்போது அவர் சொன்ன கிண்டல் வார்த்தை என் காதுகளில் இப்போதும் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. “தென்கலையான் எப்பவும் சீரங்கத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பான்கிறது சரியாத்தான் இருக்கு” என்றார். என்ன நினைத்துச் சொன்னாரோ… ஆனால் நாம் எங்கிருந்தாலும், எப்போதும் திருவரங்கம் நினைவாகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் மேற்படி விவகாரங்கள் குறித்து பிரதான அர்ச்சகர் முரளி பட்டர் ஸ்வாமியிடமும் விசாரித்தேன். அவர் சில விளக்கங்களைச் சொன்னார். ஆனால் மடைப்பள்ளி விவகாரத்தில் மன சங்கடத்துடன் எந்தக் கருத்தையும் சொல்லாமல் கடந்துவிட்டார்.
வைணவத்தின் தலைமைப் பீடமான அரங்கன் திருமுன் ராமானுஜர் சீராக்கி வைத்த மரபுகள் நம் காலத்தே கெட்டுப் போக நாம் காரணராயிருக்கக் கூடாது என்பது மட்டுமே அடியேன் சொல்ல விழையும் ஒரே வார்த்தை. இந்த உணர்வு அனைத்துத் தரப்பாருக்கும் வரவேண்டும். வரும் என நம்புகிறேன்.
- செங்கோட்டை ஸ்ரீராம்





