கல்கி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் கோகுலம் இதழ்கள் இந்த மாதத்துடன் நிறுத்தப் படுகின்றனவாம்! கோகுலம் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே… போதுமான சர்குலேஷன் இல்லை என்று தெரிய வருகிறது. விற்பனைக் குறைவு என்பது, ஓர் அளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது!
வண்ணப் பக்கங்கள், கார்ட்டூன், படம் போட்டு வாங்குவது, ஓவியங்கள் என சிறுவர் இதழ்கள் அதிகம் வேலை வாங்குபவை, செலவைக் குடிப்பவை. ஆனால் விலை அதிகம் வைக்க முடியாது.
கோகுலம் தமிழ் ஆங்கிலம் இரண்டுமே மிகச் சிறந்த முறையில் குழந்தைகளுக்கான இதழ்களாக வெளிவந்தவை!
இன்றைய காலகட்டத்தில் விரல் விட்டு எண்ணும் சிறுவர் இதழ்களே வருகின்றன. அவற்றில் இப்போது இரண்டு குறைவு!
சுட்டி விகடன் – பல வித்தியாசங்களை, இலவசங்களை செயல்படுத்திப் பார்த்துள்ளது. ஆனால் இவற்றுக்கு எல்லாம் முன்னோடி – கண்ணன் – சிறுவர் இதழ்.
1950 முதல் 1972 வரை 22 வருடங்கள் இடைவிடாது வந்தது. ஆண்டு மலர் என தீபாவளி மலர்களுடன் கூட! அப்போது கண்ணனில் மாணவப் பருவத்தில் எழுதியவர்களே பிற்கால எழுத்தாளர்களாக மாறினார்கள். கண்ணன் கழகம் என தொடங்கி சட்டையில் மாட்டிக் கொள்ளும் பேட்ஜ் – அழகாக இருந்தது. சிறிய கோகுலக் கண்ணன் வரைபடத்துடன்! தொடந்து முதல் பக்கத்தில் மாணவ எழுத்தாளர் குறித்த சிறு குறிப்புகளுடன் ஊக்கப் படுத்தல் வேறு!
இவற்றை எல்லாம் கலைமகள் நிறுவனத்தில் இருந்த போது ஆர்கிவ்ஸில் பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.
இன்றைய காலம்… மாறிவிட்டது. சிறுவர்களுக்கு தொலைக் காட்சியில் இருக்கும் ஆசை, படிப்பதில் இல்லை! படத்தைப் பார்த்து வண்ணம் தீட்டி மகிழ்வதும் படம் பார்த்து கற்பனையில் தாமாக கதைகளை உருவாக்கிச் சொல்வதிலும் திறன் குறைந்துவிட்டது. விளைவு – கற்பனைகளை வளர்த்தெடுக்கும் அச்சு ஊடகத்துக்கு வீழ்ச்சி!
அச்சு ஊடகம் – வளரும் தலைமுறையை தற்காலத்திய தொழில்நுட்ப உலகில் ஈர்க்கவில்லை அல்லது தேவைப் படவில்லை!
பள்ளி மாணவர்களுக்கு தற்போது யுடியூப் முறையில் பாடங்கள் கற்றுத் தரப் படுகின்றன. யுடியூப் தளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசின் சார்பிலேயே பாடங்கள் ஏற்றப் பட்டுள்ளன. இலவச லேப்டாப்.. பயனளிக்கிறது. வருங்காலத்தில் ஆசிரியர்களுக்கான தேவையும் கூட குறையக் கூடும்! ஸ்மார்ட்போன் இருந்த இடத்திலேயே அதைச் செய்யக் கூடும்!
கால மாற்றம் – தொழில்நுட்ப உலகம்…. அச்சு ஊடகத்துக்கு சோதனையான காலம்!




