கேள்வி கேளுங்கள் இளைஞர்களே

இன்று காலை…
மின்சார ரயில் பயணம். அருகில் அமர்ந்திருந்த இளைஞர் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சில் இருந்து… அவர் ஏதோ ஒரு நிறுவனத்தின் நேர்முகத்தேர்வுக்குப் போகிறார் என்று தெரிந்தது. கவலையுடன் நண்பர்கள் ஓரிருவருடன் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.
ஒரு நிறுவனத்தில் தொடர்பு கொண்டு, தனது படிப்பு, வேலை அனுபவம், வாங்கும் சம்பளத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் பகிர்ந்த செய்திகள் எனக்கு கவலையைத் தோற்றுவித்தது. பேச்சுக் கொடுத்தேன். அவருக்கு நெட்வொர்க்கிங் துறையில் உள்ள பணி வாய்ப்புகளைச் சொல்லி, அதில் இறங்குமாறும், எனக்குத் தெரிந்த இடங்களில் கை காட்டி விடுகிறேன் என்று சொன்னேன்.

செங்கல்பட்டில் வசிக்கும் அந்த இளைஞருக்கு 26 வயது. பிஇ இசிஇ படித்துள்ளார். கற்பக விநாயகம் கல்லூரியில். மெக்கனிகல் பிரிவில் பணி பார்த்த அனுபவம். சம்பளம் பத்தாயிரம் பெற்றுள்ளார். 11 ஆயிரத்து 200 ஒரு இடத்தில் தருவதாக கன்சல்டன்ஸியில் சொல்லப்பட்டு, அதற்கான நேர்முகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார்.
கேட்கவே சங்கடமாக இருந்தது. இன்றைய சூழலில் பி.இ. படிக்க ஆகும் செலவு… எதிர்பார்ப்புகள் எல்லாம் கணக்கிட்டால்… பத்தாயிரமும் பதினைந்தாயிரமும் சம்பளம் வாங்கிக் கொண்டு அதற்கும் கூட உள்ள எதிர்பார்ப்பில் எத்தனை இளைஞர்கள்… இவரைப் போல்?
ஏன் இந்த முரண்?
பொறியியல் கல்லூரிகள் பணம் ஈட்டும் வணிகத்தை செவ்வனே செய்கின்றன. ஆனால் அதன் பிறகான பணி உத்தரவாதம்…?
இவ்வளவு அதிகம் கல்லூரிகளைத் திறப்பவர்கள், அவர்களே இந்த மாணவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பை உத்தரவாதமான சம்பளத்தில் அமர்த்த நிறுவனங்களை தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும்.
***
அர்ச்சகர் பயிற்சிக் கூடத்தில் அத்தனை பேர் பயிற்சி பெற்றார்களே… அவர்களுக்கு குறிப்பிட்ட திருவரங்கம், சிதம்பரம், மதுரை என வருமானம் வரும் கோயில்களில் மட்டும் பணிகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கு தொட்டுத்தார்களே…
இதை முன்னுதாரணமாக வைத்து,
அரசியல் பின்னணி கொண்ட நபர்களால் தொடங்கப்பட்ட… அல்லது அண்ணா பல்கலை.,க்கு உட்பட்ட கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இனி வழக்கு தொடுக்க வேண்டியதுதான்!
அதுவும் அரசு வேலை மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுத்தால் என்ன?
இவர்களால் திணிக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிக்கு ஒரு நியாயம், இவர்களால் வருந்தி அழைத்துப் பணம் பண்ணப்பட்ட கல்லூரிகளில் படித்து வந்த இளைஞர்களுக்கு ஒரு நியாயமா?

கேள்வி கேளுங்கள் இளைஞர்களே!