செங்கோட்டை வாஞ்சீஸ்வரன் என்ற வாஞ்சி மாமா!

செங்கோட்டை வாஞ்சி மாமா ஐயனுடன் ஐக்கியமாகிவிட்டார். அண்மைக் காலத்தில் ஆபத் சந்யாசம் எடுத்துக் கொண்டிருந்தார்.

80-களில் பள்ளிச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்த காலம் முதல் மனத்தில் பதிந்து விட்ட, சிரிப்பைச் சிதறவிடும் அழகான முகம்!

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் முன்பெல்லாம் தவறாமல் அவரைச் சந்திப்பேன். எங்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் படியிறங்கும் போதெல்லாம் மேலே நிமிர்ந்து பார்த்து, ஏபிடி மாடியில் அவர் குடியிருக்கும் மேல்தளத்தில் நோட்டம் விட்டு, அவர் கண்ணில் பட்டால் ஒரு விசாரிப்புடன் தொடர்ந்து செல்வேன்.

சபரிமலை ஐயப்பனின் அதிதீவிர பக்தர். நான்கு வயது முதல் மலைக்கு சென்றவர். பதினெட்டு வருடங்கள் தொடர்ந்து சென்று, பதினெட்டுப் படிகளில் ஏறி வந்தால், ஒரு சுற்று மலைக்குச் சென்று வந்ததாகப் பொருள். இது போல் ஐந்து சுற்று சபரிமலைக்குச் சென்று வந்தவர். அதாவது 90 வருடங்கள் மலைக்குச் சென்று, மகர ஜோதி தரிசனம் கண்டவர். தள்ளாத வயதிலும் சென்று வந்தார். ஆரியங்காவு தர்ம சாஸ்தாவுக்கு செங்கோட்டை அக்ரஹாரவாசிகளால் செய்யப்படும் ப்ரீதியில் முன்னணியில் நிற்பார்.

செங்கோட்டையில் மதியம் 12 மணிக்கு பைக்-கை எடுத்தால் 4 மணிக்கு பம்பைக்குச் சென்று ஒன்றரை மணி நேரத்தில் மலை ஏறி, 7 மணிக்குள் தரிசனம் முடித்து 8 மணிக்கு பம்பை திரும்பி, இரவு 12க்கு வீட்டுக்கு வந்து சேர்ந்த நாட்கள் எல்லாம் உண்டு. சாதாரணமாக கோயிலுக்குச் சென்று வருவது போல் அவசர கதியில் சபரிமலைக்குச் சென்று வரும் எனக்கு ஊக்கத்தின் ஊற்றாய்த் தெரிந்தவர் வாஞ்சி மாமா.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஐயப்பன் குறித்த, சபரிமலை குறித்த தொகுப்பைச் செய்தபோது, வாஞ்சி மாமாதான் கதைகள் பல சொன்னார். அவரது படத்தையும் வைத்து தொகுப்பை பிரசுரித்தேன்.

என் அப்பாவும் வாஞ்சி மாமாவும் ஏபிடி திண்ணையில் அமர்ந்து இரவுப் பொழுதெல்லாம் கதை அளந்து கொண்டிருப்பார்கள். என்னதான் பேசுவார்களோ… ஆனால் ஏதோ பேசிக் கொண்டேயிருப்பார்கள் அலுக்காமல்!

பிரமசாரியாகவே காலந்தள்ளியவர். ஒற்றை அறை. ஒரு அடுப்பு. சிறிய கலயத்தில் அவரே சமைத்து, ஒரு ஓரமாக வைத்திருப்பார். தனிமை என்பதனால் தன் வாழ்க்கையை முழுதும் ஐயப்பனுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் நான் தினமணி பணியில் இருந்த போது, ஒரு நாள் திடீர் அழைப்பு அவரிடம் இருந்து. சீராமா மேற்கு மாம்பலம் பாணிக்ரஹா கல்யாண மண்டபத்தில் சாஸ்தா பூஜை. நானும் வரேன். என்னை வந்து பார். ஏதாவது நியூஸ் போட முடியும்னா போடு. இங்க பசங்கள்லாம் பிரியப்படறா என்றார். போய்ப் பார்த்து நமஸ்கரித்து வந்தேன்.

அவரை ஐயப்பன் என்சைக்ளோபீடியா என்றே சொல்லலாம். புனலூர் தாத்தா என்றழைக்கப்பட்ட புனலூர் சுப்ரமணிய ஐயரின் நேரடிச் சீடர். ஆபத் சந்நியாசம் எடுத்துக் கொண்ட பின்னர் வாஞ்சி மாமாவை சந்திக்க இயலாமல் போய் விட்டது. இனி… வாய்ப்பில்லை! ஆனால், டேய் சீராமா என்று சப்தமிட்டு அழைக்கும் அவரது குரல் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஊரை விட்டு வெளியில் வந்து, சென்னையிலும், கோவையிலும் அவருக்கு இருக்கும் பக்தர் கூட்டத்தையும், ஐயப்பமார்களின் கூட்டத்தையும் பார்த்தால் எனக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது. குருசாமி குருசாமி என்று அவரது அன்பர்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நானோ… வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விளையாடுவது போல்… ஒய் மாமா, நீர்… வாரும் போரும் என்று செங்கோட்டைக்கே உரித்தான பாஷையில் விளையாடிக் கொண்டிருந்தேன். அதுவும் அண்மைக் காலம் வரையில்!

நான் இதழியல் துறைக்கு வந்த பின்னர் கொஞ்சம் மரியாதை கொடுத்து வாங்கோ போங்கோ சார் அப்டின்னு ஏதேதோ சொல்லி அழைக்க ஆரமித்தார். அவரிடம் தெண்டனிட்டு, ஓய் மாமா.. நீர் என்ன இப்படியெல்லாம் முறையை மாத்தறீர்? பிரசிடெண்டேயானாலும், அம்மா அப்பாவுக்கு பையந்தான். அதுபோல்தான் உமக்கு நான் அதே ஐயங்கார் அம்பிதான்… அப்படியே கூப்பிடும் என்று காதுக்குள் கத்தி குறும்பு செய்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது.

செங்கோட்டையில் பெரும்பாலானவர்களும் அவரிடம் அப்படித்தான் அன்யோன்யத்துடன் பழகிக் கொண்டிருந்தார்கள். அவரது நினைவலைகள், வெகுகாலம் செங்கோட்டை அக்ரஹாரவாசிகளிடையே நிறைந்திருக்கும்!

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.