December 9, 2024, 2:51 AM
26.4 C
Chennai

பொன்மொழி காட்டிய புதுமொழி!

வித்யா ஸாடங்கா ஸ்வகீதா ச க்ஷுரதிக்ஷணா ச த:க்ருதா |
சிந்தயா ச்ருமித: ஸீர்ணோ நர: கிம் வித்யயா கியா ||
எல்லா அங்கங்களுடன் கல்வி நன்கு பயிலப்பட்டது. அறிவும் கத்தி போன்று கூர் தீட்டப்பட்டது. ஆனால் கவலையில் தவித்துக் கற்றவன் தளர்ந்தால், அந்தக் கல்வியாலோ அறிவாலோ என்ன பயன்?
– இது ஒரு சுபாஷிதம். அதாவது, சம்ஸ்க்ருதப் பொன்மொழி.

இது எனக்குள் பலசமயங்களில் பலவித எண்ண ஓட்டங்களை ஏற்படுத்தும். பல ஞானிகளைப் பற்றி நாம் படித்தால் ஒன்று தெரியும்… அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப் பட்டதில்லை. கவலை என்பது, அரக்கன் போன்றது. அது மனத்துள் புகுந்து விட்டால், பல நற்சிந்தனைகள் அந்த மனத்தைவிட்டு காணாமல் போய்விடும். நல்ல சிந்தனை ஓட்டம் என்பது தவம் போன்றது. ஒன்றைப் பற்றிய எண்ண அலைகள் மனத்தில் மீண்டும் மீண்டும் மோத, அது இறுதியில் ஒரு புதிய பரிணாமத்தை அடையும். அதுவே தவத்தின் இறுதியில் கிடைக்கும் வரம் போன்றது.
நல்ல சிந்தனைகள் என்று மட்டும் இல்லை… சுய நினைவும், கற்றதனால் பெற்ற அறிவும் கூட, கவலையில் தோய்ந்திருந்தால் மனத்தில் உடனே எழுவதில்லை; உடனடியாய் செயல்படுவதில்லை! குறிக்கோள் மற்றும் சுயமுயற்சியின் துணை கொண்டு அமைய வேண்டிய நம் முன்னேற்றம், கவலையின் காரணத்தால் உண்டான மழுங்கிய மனநிலையால், அமையாமல் போகிறது.
கவலைகள் பலவிதம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதம். அந்தக்காலத்தில் “படைப்பாளிகள், புலவர்கள் போன்றோருக்கு கவலைகள் மனத்தை அரிக்கக்கூடாது; அப்படி அரித்தால் அவர்களின் படைப்பாற்றல் போய்விடும், தமது நாட்டின் சிறப்பும் போய்விடும்’ என்று எண்ணிய புரவலர்கள், தகுந்த சன்மானம், பொற்காசுகள், நிலம், பசுக்கள் என அளித்து அவர்களை போஷித்து வந்ததை அறிவோம். தமிழில் எழுந்துள்ள இத்தனை படைப்புகளுக்கும் இலக்கியச் சிறப்புக்கும் புலவர்கள் மட்டும் காரணமில்லை; அவர்களை போஷித்த அரசர்களும் தனவான்களும் முக்கியக் காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.
இதை எண்ணும் போது, மகாகவி பாரதியின் உள்ள உணர்வு நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
கவலை என்பதோடு கூட, அதன் காரணத்தால் எழும் பதட்டம் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டால் நம் யோசிக்கும் திறனும் குறைந்து விடுகிறது. அப்போது நாம் படித்த படிப்போ கற்ற அனுபவங்களோ உடனடியாய் கைகொடுப்பதில்லை. எனவேதான் எதையும் யோசித்து, பிறகு செயல்படுத்தச் சொல்கிறார்கள். 
சென்ற வாரம் ஒருநாள், இரவு மணி 1.10. கைபேசி மணி அடித்து எடுத்தேன். இரண்டு தெரு தள்ளி இருக்கும் மூத்த சகோதரி ஒருவர் அழைத்தார். 84 வயதான அவர் அம்மாவுக்கு இதய நோய் உண்டு. அன்று இரவு அவருக்கு உடல் நிலை சற்று மோசமாகிவிட்டது. வேறு யாரும் வீட்டில் இல்லாததால் குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொண்டு “என்ன செய்வது’ எனக் கேட்டிருக்கிறார். அவரும் ஒரு மாத்திரையின் பெயர் சொல்லி, “இப்போது கொடுங்கள்; நாளை காலை பார்க்கலாம்’ என்றிருக்கிறார். வேறு வழியில்லாமல் அந்த இரவில் அவரும் எனக்கு போன் செய்து குறிப்பிட்ட அந்த மாத்திரையை உடனே வாங்கித் தருமாறு கேட்டார். நானும் 24 மணி நேரம் திறந்திருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று கேட்டேன். “எங்களிடம் ஸ்டாக் இல்லை; (ஒரு கடையின் பெயர் சொல்லி) அந்தக் கடையில் கேளுங்கள்’ என்றார். இப்படி இரண்டு கடைகள் மூன்று பெரிய மருத்துவமனைகளின் மருந்தகங்களுக்குத் துரத்தியடிக்கப்பட்டு கேட்டால், ஒரே பதில்… “எங்களிடம் ஸ்டாக் இல்லை; அங்குக் கேளுங்கள்…!’
பிறகு அந்த சகோதரிக்கு தகவல் தந்து உடனடியாக அருகிலுள்ள நர்ஸிங் ஹோமுக்கு ஆட்டோ வில்அழைத்துவரச் சொல்லி நானும் காத்திருந்தேன். ஈ.சி.ஜி மற்றும் உடனடி சோதனைகள் முடித்து அந்த மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டோடு அதே மருத்துவமனையின் மருந்தகத்தில் கேட்டால், அவர், நான் முதலில் என்ன மருந்து கேட்டேனோ அதை, (இவரும் அதையேதான் எழுதியிருந்தார்) எடுத்துத் தந்தார். குழப்பத்தோடு வாங்கிச் சென்று முதலில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்துவிட்டு ஆறஅமர மருந்தின் காம்பினேஷனைப் பார்த்துவிட்டு யோசித்ததில் புரிந்தது – ஏன் இத்தனைபேரும் “”எங்களிடம் ஸ்டாக் இல்லை, வேறு கடையில் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று! அதாவது, கல்லூரி முடித்த கையோடு திருச்சியை மையமாகக் கொண்டும் நெல்லையை மையமாகக் கொண்டும் சுமார் மூன்றரை வருடங்கள் மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ்வாகப் பணிபுரிந்திருக்கும் அனுபவத்தாலும் படிப்பாலும் புரிந்தது – அந்த மருந்து லோராஜிபாம் வகையறா என்று!
பெரும்பாலான கம்பெனிகள் வித்தியாசமான பெயரை வைத்திருப்பதால் உடனடியாக மருந்தின் தன்மை நம் நினைவுக்கு வருவதில்லை. மேலும் அரைகுறைத் தூக்கத்தில் எழுந்து பதட்டமான மனநிலையில் என்ன ஆகுமோ என்ற கவலை தோய்ந்த முகத்தோடு மாத்திரையைத் தேடிச் சென்றதால், அது என்ன வகையறா மருந்து என்று யோசிக்கக்கூட முடியவில்லை. இப்போது முதலில் சொன்ன சுபாஷிதத்தை மீண்டும் படியுங்கள்.
முதல் கடையில் கேட்டபோதே, அந்த நபர், “சார் இந்த மருந்தை டாக்டரின் சீட்டு இல்லாமல் தரமாட்டோ ம்’ என்று சொல்லியிருந்தால், எனக்கும் விஷயம் விளங்கியிருக்கும்; மற்ற இடங்களுக்கும் அலைந்திருக்க வேண்டாம்.
நிறையப்பேர் இப்படித்தான் தங்களை ஒரு வழிகாட்டியாக எண்ணிக் கொண்டு, தவறான வழியைக் காட்டிவிடுவார்கள், அது பயணப் பாதையோ அல்லது வாழ்க்கைப் பாதையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
வழிகாட்டி என்றவுடன் கீதை சொன்ன கண்ணன் நம் நினைவுக்கு வருகிறார். கீதாசார்யனான கண்ணன் பரத கண்டத்து மக்களுக்காகக் கொடுத்த அரிய அறவுரைகள் நல் வழிகாட்டி. ஆனால் அதற்கு விளக்கம் சொல்லும் பேர்வழிகள், கீதையின் உள்ளர்த்தத்தை சிதைத்து ஆன்மா, அமைதி, தவம் என்று மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் வீரத்தையும் அழித்து கோழைகளாக்கி விடுகிறார்கள். கீதையின் அர்த்தம் மிகத் தெளிவு. எவரெவர் எந்தெந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்களோ அவரவருக்குத் தக்க நல் போதனை நல்குவது. இல்லறத்தானுக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன. பிரம்மச்சாரியான இளைஞனுக்கு என்று சில கடமைகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த இருவருக்கும் ஒரு சன்யாசிக்குண்டான சாத்வீகத்தையும் சன்யாசிக்கேயுரிய தன்மைகளையும் போதித்தால்… மக்களின் ஸ்வபாவம் மாறிப்போகுமே! இதுதான் ஆஸ்ரமக் குழப்பம் என்பதோ!
இன்று நடக்கும் பெரும்பாலான கீதை விளக்கவுரை நிகழ்ச்சிகளும், ஆன்மீகவாதிகள் நடத்தும் வகுப்புகளும் இப்படித்தான் மாறிப்போயிருக்கின்றன. போர்க்களத்தில் அதர்மத்திற்கு எதிராக யுத்தம் நடத்த அர்ஜுனனைத் தயார் செய்த கண்ணனின் போதனைகளை ஆஸ்ரமக் குழப்பத்தின் காரணத்தால் எல்லா ஆஸ்ரமத்தார்க்கும் பொதுவானதென்று கருதி, தாம் அறிந்தவற்றை போதிக்கும் ஆன்மிகவாதிகள் செயலால் சாதாரண மக்களிடையே கொடுமையை எதிர்க்கும் நெஞ்சுரமும் வீர உணர்வும் மழுங்கிப் போனதுதான் மிச்சம்!? இந்த நாட்டின் அடையாளம் – பார்த்தனுக்குத் தேரோட்டி, பாரதவாசிகளுக்கு வழிகாட்டியாகி, அவரவர் தர்மத்தைக் கடைப்பிடிக்க ஆணையிட்டு, அவரவர் கடமையை சரியாகச் செய்யச் சொன்ன, வீரமும் வெல்லும் உபாயங்களும் போதித்த கண்ணனே!

ALSO READ:  பாரதி சிந்து
author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ALSO READ:  பாரதி சிந்து

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week