
“கருப்புக் கண்ணன் கேட்கிறான்”
~ கவிதை: மீ. விசுவநாதன் ~
நெருப்பைப் போலத் தூயவன் – நம்
நெஞ்வில் வாழும் மாயவன்
கருப்புக் கண்ணன் கேட்கிறான் – வீண்
கவலை கொள்ள வேண்டுமோ ? (நெருப்பைப் போல )
திருட்டும் பொய்யும் செய்பவர் – ஒரு
தேதி தன்னில் மாட்டுவர்
வருத்தம் கொள்ள வேண்டுமோ – என்
வார்த்தை மீறிப் போகுமோ ? (நெருப்பைப் போல )
நீதி நெறிகள் மதிப்பவர் – என்
நேசம் மிக்க அடியவர்
சாதி மதங்கள் எனக்கிலை – என்
சாத்தி ரங்கள் உனக்கிலை (நெருப்பைப் போல )
அசுர குணங்கள் யாவுமே – கண்
அசைவில் மாய்ந்து போகுமே
உசுரக் காக்கும் தேவனாய் – இந்த
உலகில் என்றும் வாழுவேன் (நெருப்பைப் போல )
தீமைக் கென்றும் அஞ்சிடேல் – உன்
திறமை விட்டுக் கெஞ்சிடேல்
நாம மொன்றைத் தெரிந்துகொள் – அதை
நாள்வி டாமல் மொழிந்துணர் (நெருப்பைப் போல )
உடமை ஏதும் உனக்கிலை – எனும்
உண்மை அறியத் துயரிலை
கடமை தன்னை மகிழ்ந்துசெய் – அதில்
காணும் பலனை எனக்களி (நெருப்பைப் போல )
நன்மை தீமை யாவுமே – எந்த
நாளும் உண்டு புரிந்துகொள்
உன்னை நேர்மை வழியிலே – நீ
உயர்த்தும் போது பழியிலை. (நெருப்பைப் போல )
(04.11.2021 அன்று தீபாவளித் திருநாள்)