
-கவிஞர் கோபால்தாசன்
ஏன் மூஞ்சிய எப்பவும்
‘உம்’ ன்னு வச்சிக்கிட்டு
வேலை பாக்குறீங்க
சிரியுங்களேன்
சார்… சார்.. சார்
என்ன சார்
ஒரு மனுஷி வந்து
முன்னால நிக்கிறேன்
கொஞ்சம் நிமிர்ந்து பார்க்கிறது
அப்படி என்ன வேலையோ
மதியம் என்ன எடுத்து வந்தீங்க
நான் வெஜிடபிள் ரைஸ்
இன்னைக்கு என்னோட
சாப்பாட்ட டேஸ்ட் பண்ணிப் பாருங்க
என் தங்கச்சிக்கு
பையன் பிறந்து இருக்கான்
நீங்க ஒரு நல்ல பேரா
செலக்ட் பண்ணி சொல்லுங்க
வீட்டில் என்ன நடந்தாலும்
நான் என்ன பொருள் வாங்கினாலும் உங்களிடம்
சொல்லாமல் இருந்ததில்லை
ஒரு ரகசியம்…
என் மார்புக்கு மேல
ஒரு கட்டி இருக்கு
அதைச் சொன்னேனா
ஹலோ…
மண்டைல கால் கிரவுண்ட்
வாங்கிட்டாப்ல இருக்கு
என் செல் நம்பர்
உங்களைத் தவிர
யாரிடமும் கொடுக்கல
கொடுக்கவும் மாட்டேன்
நீங்க விருப்பப்பட்ட மாதிரி
மூக்குத்தி போட்டிருக்கேன்
இப்ப எப்டி இருக்கு
இப்ப பேசலனா என்ன
ஆபீஸ் முடிஞ்சு போனப்புறம்
கால் பண்ணி
மொக்கை போட்டா போச்சு
இந்த டூருக்கு
நீங்க இல்லாம போக
எனக்கு சுத்தமா பிடிக்கல
ப்ளீஸ் வாங்களேன்
நான் கால் பண்ணப்ப
யாரோட பேசிட்டு இருந்தீங்க
அவ்வளவு நேரமா
எவளோட கடலை போட்டீங்க
என்னிடம்
ஏதாவது வாலாட்டினா
அவ்வளவுதான்
நீங்க இருக்கிற ஏரியா
என்னோடது பாத்துக்கோங்க
அந்தச் சேலை
உங்களுக்குப் பிடிக்கல்லைன்னுதான்
இந்தச் சேலையில வந்தேன்
எப்டி இருக்கு
நீங்க சொன்ன மாதிரி
எனக்கு சுடிதார் ஒத்து வராது
சேலைதான் பெஸ்ட்
உங்களுக்கு
ஜாதி மல்லியோட வாசம்
பிடிக்கலைன்னு
தலையில இருந்த அந்தப் பூவ
தூக்கியெறிஞ்சுட்டேன்
அப்றம் என்ன
இல்ல…
இரவு எத்தனை மணியானாலும் பரவாயில்லை
உங்க வேலை எப்ப முடியுமோ
அப்ப நான் உங்களோட கிளம்புறேன்
என் வீட்டிலயும் சொல்லிட்டேன்
என் பிறந்தநாள் கூட
மறக்கிற அளவுக்கு
சாருக்கு அப்படி என்ன வேலையோ?
யாரு என்ன நினைச்சாலும்
பரவாயில்லை
நான் உங்க பக்கத்துல
இருந்துதான் டீ குடிப்பேன்
யார் என்ன
சொல்றாங்கன்னு பார்ப்போம்
நமக்குள்ள எத்தனை தடவை
சண்டை வந்து
நான் அழுதாலும்
கோபம் வந்தாலும்
உங்களைப் பார்த்ததும்
மறந்து பேச ஆரம்பிச்சிடுறேன்
அது எப்டி?
நேத்து நான் வராததுக்கு
உங்களுக்கு வருத்தம் இல்லையா
சரி பரவாயில்லை
என் வேலையை
நீங்க பார்த்ததுக்கு தேங்க்ஸ்
நீங்க சொல்றபடி பார்த்தா
நான் ரொம்ப அழகா
ம்…சொல்லுங்க அப்படியா
நான் லவ் பண்ணல
என்ன ஒருத்தன்
நான் போற இடமெல்லாம்
வந்துகொண்டிருந்தான்
எனக்குப் பிடிக்கல
என் முதுகுக்குப் பின்னாடி
ஜாக்கெட் கீழே பிராவை
அடிக்கடி சரி செய்ய சொல்லும்
உங்கள் நாகரிகம்
எனக்குப் பிடிச்சிருக்கு
நீங்க இங்கிருந்து
எந்த உயரத்துக்கும்
மூலை முடுக்குக்குப் போனாலும்
உங்களை நான்
பார்த்துக்கொண்டிருப்பேன்
உங்கக்கிட்ட மட்டும்தான்
மனம் திறந்து பேச முடியுது – ஏன்
வீட்லகூட நான் அப்டி இல்ல
தெரியுமா
உங்க காதல் கவிதைத்
தொகுப்பை போலவே
ஒரு காதல் எனக்கும் இருந்துச்சு
இப்ப அது மறைஞ்சுப் போச்சு
உங்கிட்ட நட்பா பழகுறதுல
எனக்குப் பெரும தெரியுமா?