தடுமாற்றத்தின் முதல் விதை

இலக்கியம் கவிதைகள்

picturelove மழைக்காலம் துவங்கும் முன்பே… ஒருநாள்! மழலை மொழியோடு பார்க்க வந்தாய்! முதல் பார்வையிலேயே முதல் தடுமாற்றம்! காய்ச்சல் கண்டதாய் உன்தன் முகம் ! காய்ச்சல் கண்டதோ என்தன் மனம் ! வெய்யிற் காலத்தின் விருந்தோம்பலில் வேதனை துறந்து ஈடுபட்டிருந்தேன்! உன் மூக்கில் வழிந்த நீர் முட்டிப் பார்த்து முனகலைக் கொடுக்க… என் கண்ணில் கரைகண்ட நீர் சூழலின் தாக்கத்தால் ஆவியாகிப் போயிருந்தது! ஈரத்தின் தன்மையை உலரா நிலையில் உணர்த்திய கூந்தல்! வீங்கிப் போயிருந்த உன் முகம்… தாங்கிப் பிடித்தேன் மனத்தில்! கேள்விக்கே இடமில்லை! விடையெல்லாம் வினாவாகி… அதுவும்கூட வீணாகி… தடுமாற்றத்தின் முதல் அடியை தன்னிச்சையாய் நான் உணர்ந்தேன்! அன்று பிறந்தது உன் மீதான பரிவு! பரிவு பிறந்த போது… காதலும் பிறந்தது! காதல் மலர்ந்த பின்னே… கனிவும் பிறந்தது! ஆனால் நீயோ… அஸ்திவாரத்தின் ஆரம்ப நிலையிலேயே அமிலத்தை ஊற்றிவிட்டாய்! அறியாமல் போனது என் தவறு! அறிந்தே செய்தது யார் தவறோ? அதுவரை… என் மொழி வீச்சு வெல்லுமென இறுமாப்பில் திளைத்திருந்தேன்.. அதன்பின்… உன் விழி வீச்சில் விழுந்தபின்னே எழமுயன்று களைத்துவிட்டேன்…! ஆண்டி ரண்டு போனாலும் ஆண்டி யாகிப் போகாமல்… நானும் என் சொல்வீச்சும்! இவ்வீச்சுக்கு முன்னதும் பின்னதுமாய் நானும் என் வாழ்வும்! அன்று… முகம் காட்டி மலர்ச்சியுடன் புன்னகை பூத்தாய்! இன்றோ… முகம்காட்டிச் செல்கின்றாய்- வெறுப்பை உமிழ்ந்தே! அலுப்பும் சலிப்பும் அதற்குள் ஏன்? அலட்சியப் படுத்தல் அன்புக்கு உண்டோ? மனித வாழ்வில் ஒரே மகிழ்ச்சி… நேசிப்பும் நேசிக்கப்படுதலும்! நேசிப்பு- எந்தத் தடையையும் பொருட்படுத்துவதில்லை! ஆற்று நீரைப் போல் அன்பு பெருக்கெடுக்கும்! தடையைச் சந்தித்தால் தகர்த்துச் செல்லும்- புதிய பாதையை உருவாக்கி! அதில்… தடுமாற்றத்திலிருந்து தன்மாற்றத்திற்கு பயணம் தொடரும்! காலம் உணர்த்தும் காதல் உணரும் காத்திருப்பேன்… அதுவரை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.