ஆதவன் உச்சி கடந்தான் அமிலம் சுரந்தது வயிற்றில்! அகோரப் பசிதான்… ஆனாலும் நாவுக்கு சுவை தேவை! உப்பும் உரப்பும் அமுதச் சுவையும் என அறுசுவை ஏக்கம் நாவுக்கு! வழக்கமான கேண்டீன் வாசம் வாய்க்கு ருசியாய் இல்லை.. வாவென அழைத்தேன் வந்தான் உடன் இருந்த நண்பனுமே! உணவு விடுதி வாசல் நாசி துளைத்த வாசம்… கறியும் கூட்டும் காரக் குழம்பும்… கவனமாய் பரிமாறப்பட… கவனத்தில் வந்தாய் நீ! உனக்குப் பிடித்த உருளைக் கிழங்கு கறி! ஒவ்வொரு கவளம் உணவும் உந்தன் கவனம் கொண்டே உள் சென்ற மாயம்! நிமிடம் சில கரைந்திருக்கும்! நிமிர்ந்து பார்த்தால்… நண்பன் பாதிக்கூட உண்ணவில்லை! உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது…! நண்பன் முனகினான்… உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்! குழம்பு உரப்பு ரசத்தில் உப்பு ரசமாயில்லை கூட்டு வேகவில்லை… கறியோ பிசுபிசுத்துக் கிடக்கிறது! எப்படி உண்டீர்கள் இதை? உங்கள் நாவில் சுவை தெரியாதா? நாவின் நுனி வரை வந்த பதில்.. நாணத்தால் தேங்கிப் போனது! உன் நினைவுச் சுவை நீங்காதிருக்கையில் உணவுச் சுவை உணர்வில் இல்லையே!
நினைவுச் சுவை நீங்காதிருக்கையில்…!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari