
ஏரார் முயல் விட்டுக் காக்கைப்பின் போவதே… – என்று நண்பர் ஒருவர் ஒரு கருத்தை இட்டு, தேடத் தூண்டிவிட்டார்.
அதாவது… அழகான முயல் குட்டி கண் முன்னே விளையாடிக் களிப்பூட்டும் நிலை இருக்க… காகத்தின் பின்னே துரத்திச் செல்லும் பித்தரும் உண்டோ? என்பது பொருள்!
அழகா வெள்ளை வெளேர்னு முயல்குட்டி இருக்கும் போது, கருப்பா இருக்கற காகத்தை யாராச்சும் துரத்திப் பின்னாடி போவாங்களா? அப்டின்னும் பொருள் கொள்ளலாம்.
இருந்தாலும் நம்ம இளம்பருவ நெஞ்சுக்குச் சொல்லும்படியாய் அமைவதென்றால்… கலர்புல்லா ஒண்ணு கண்ணுக்கழகா பக்கத்துல உக்காந்திட்டிருக்கும்போது, எங்கோ போகிற ஒரு கன்னங்கரேல் பின்னே கண்ணு போவலாமாங்கிறதுன்னு வெச்சிக்கலாம்!
சரி.. சரி… கொஞ்சம் இலக்கிய நுகர்ச்சிக்குப் போவோம்.!
தக்காரோடு ஒன்றித் தமராய் ஒழுகினார் மிக்காராம் என்று சிறியாரைத் தாம் தேறார்; கொக்கார் வளவயல் ஊர தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் – என்று பழமொழி காட்டி பழந்தமிழை ஊட்டிய பெருமை நம் முன்னோர்க்கு உண்டு.
இப்படிப் பழமொழிகள் காட்டி எத்தனை எத்தனை அறிவுரைகளை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.!
” ஏரார் முயல்விட்டு காக்கைப்பின் போவதே” என்பது, திருமங்கை ஆழ்வாரின் சிறிய திருமடல் வாசகம்!
“முயல் விட்டு காக்கைப்பின் போனவாறே” என்பது, அப்பரடிகளின் தேவாரத்திலும் உள்ளது. அவரது நான்காம் திருமுறையில். திருவாரூர் தலம் குறித்த பாடலிது!
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டு என்னை ஓர் உருவமாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு என்னுள்ளங் கோயிலாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள்செய்த ஆரூரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே – என்று பாடுவர்.
இந்தத் திருவாரூர்ப் பதிகத்தில் உள்ள சிறப்பு, இது போலே 10 பாடல்களிலும், இறுதியில் பழமொழி வந்து கண்காட்டுவது ரசிக்கத்தக்கது!
கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே
அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட ஆறே
பனிநீராற் பரவைசெயப் பாவித்தேனே
ஏதன்போர்க் காதனாய் அகப்பட்டேனே
இருட்டறையின் மலடுகறந்து எய்த்தஆறே
மின்மினித்தீக் காய்ந்தவாறே
பாழூரிற் பயிர்க்கம்புக் கெய்த்தஆறே
தவமிருக்க அவஞ்செய்து தருக்கினேனே
கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்தஆறே
வள்ளுவப் பேராசான், கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்றார்.
இதைப் போல், திருமுறையில் உள்ள நக்கீரரின் பாடலில்
தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை
நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை
வாக்கும் மனமும் இறந்த மறையனைப்
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்றறி வரியவன்
தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம் கலவர் போலவும்
விளக்கங் கிருப்ப மின்மினி கவரும்
அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும்
– என்று முயல் விட்டுக் காக்கைப் பின் போகும் கலவர் போல்.. என்று உவமை காட்டுகிறார்.
பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய பழமொழி நானூறு, இப் பழமொழியைக் காட்டுகிறது.
அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை
முற்ற அறிந்தார் முதலறிந்தார் – தெற்ற
முதல்விட் ட·தொழிந்தோர் ஓம்பா ஒழுக்கம்
‘முயல்விட்டுக் காக்கை தினல்’ . (ப.நா.,370)
இந்தப் பாடலில் தான், முயல் ஊன், காக்கை ஊன் தினல் என்பது பற்றி வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.
முயல் விட்டுக் காக்கை தினல் போல்… என்பது பழமொழி!
இப்போது மீண்டும் ஆழ்வாருக்கு வருவோம்….
ஆராரிவற்றினி டையதனை எய்துவார்
சீரார் இருலையும் எய்துவர் — சிக்கெனமது (2674)
ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகத்தார் சொல்லும்சொல்
ஒராமையாமாரதுவுரைக்கெங்கெளாமெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி
தேரார் நிரைகதிரோன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆராவமுதமண்கய்தி — அதில்நின்றும் (2695)
வாரதொழிவதன்னுண்டு — அதுநிற்க
ஏரார்முயல்விட்டு காக்கைப்பின் போவதே? – என்று மடல் வரைந்தார் ஆழ்வார்.
அழகிய முயலைவிட்டு (உபயோகமற்ற) காக்கை யின் பின்னே தொடர்ந்து போவாருமுண்டோ? என்ற இதன் பின்னணி என்ன என்பதை ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையில் காணுவோம்…
***- இனி, இம்மூன்று புருஷார்த்தங்களான காமபுருஷார்த்தமே சிறந்ததென்னும் தமது திருவுள்ளத்தை வ்யங்க்யமாக வெளியிடுகிறார், – (இவற்றினிடை அதனை
யெய்துவார் ஆரார், (அவர்) சீராரிருகலையுமெய்துவர்) அதனை என்று தமக்கு உத்தேச்யமான காமபுருஷார்த்தத்தைக் சுட்டினபடி. காம புருஷார்த்தம் எவர்கட்குக் கைவந்ததோ, அவர்கட்கு அறம் பொருள்களும் கைவந்தனவேயாம் என்றபடி. இதன் உட்கருத்து யாதெனில், காம்மேஸாதயம், அதாவது பலன், அதனைப் பெறுதற்கு அறமும் பொருளும் ஸாதநம் (உபாயம்) என்பது இவர் திருவுள்ளம்.
எவர்கட்குப் பலன் கைபுகுந்த்தோ, அவர்கள் அதற்கு வேண்டிய ஸாதநங்களையும் அநுஷடித்தவர்களாக ஆகக்கடவர்களாதலால், காமம் கைவந்தவர்கட்கு அறமும் பொருளும் கைவந்தவேயாமென்பது அர்த்தாத் ஸித்தமாயிற்றென்க. அறம் பொருள்களை இருகலை என்றது –நாம்மே ப்ரதாந அங்கியாய், அவை அதன் கலாமாத்திரமாய் இருத்தல் பற்றியக் கலையாவது ஏகதேசம்.
சிலர், “ஆரார் இவற்றின் இடையதளை எய்துவார்“ என்று பிரித்து –தர்மார்த்த காமங்களுள் நடுப்பட்டதாகிய பொருள் கைவந்தவர்களுக்கு, முன்னும் பின்னுமுள்ள மற்றைப் புருஷார்த்தங்களிரண்டும் கைவந்தனவாம் என்பதாக ஆபாத ப்ரதீதிகொண்டு பொருள் சொல்லக்கூடும். அது ப்ரகரணத்தோடு பொருந்தாது, ஆழ்வார் திருவுள்ளத்துக்கும் சேராது. காமத்தைக் கடைப்பிடித்துச் சிறப்பித்துப் பேசுகிற ப்ரகரணமிறே இது. ஆழ்வார்க்குக் காமத்திலேயிறே இப்போது நோக்கு, காமம் நிஷித்தமன்றோ, அதனை ஆழ்வார் கடைப்பிடிக்கலாமோ?
எனின், விஷயாந்தர காமமென்றும், பகவத் விஷய காமம் என்றும் காமம் இருவகைப்படும், பகவத் விஷயகாமம் வேதாந்தங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. அதனையே இங்கு ஆழ்வார் கடைப்பிடித்தாராதலால் குற்றமொன்று மில்லையென்க.
இனி நான்காவதாக மோக்ஷபுருஷார்த்தமென்று ஒன்று உண்டென்பாருடைய ஸித்தாந்தத்தை தூஷிக்கிறார். இதுவென்? ஆழ்வார் நாஸ்திகரன்றே, ஆஸ்திகராயிருந்துவைத்து மோக்ஷத்தை இல்லைசெய்யலாமோ எனின், உட்கருத்து
அறிகின்றிலீரகள். “நீள்விசும்பருளும்“ என்றும் “இறந்தால் தங்குமுர் அண்டமே கண்டுகொண்மின்“ என்றும் தமது பலபல திவ்ய ஸூக்திகளாலே பலச்ருதிகளிலே மோக்ஷத்தை அருளிச்செய்கிற இவ்வாழ்வார் மோக்ஷதூஷகராக எங்ஙனேயாவர்? பின்னே இதுதன்னில் மோக்ஷத்தை இல்லைசெய்வானேன்? என்னில், இங்கு நஹிநிந்தா நியாயம் அநுஸந்திக்கத்தக்கது, மோக்ஷதூஷணம் இங்கு விளங்க நின்றாலும் அர்ச்சாவதார ப்ராவண்யத்தைச் சிறப்பித்துச் சொல்லுவதில் ஆழ்வார்க்கு முக்கிய நோக்கமென்று கொள்ள வேணுமேயல்லது மோக்ஷதூஷணத்தில் நோக்காகக் கொள்ளக்கூடாது. நஹிநிந்தா நியாயத்தின் கருத்து இதுவேயாம்.
மோக்ஷமுண்டென்பது அவிவேகிகள் சொல்லும்சொல் என்றதை நிரூபிக்கிறார் காரார் புரவியேழ் என்று தொடங்கி. மேகமண்டலத்திலே சஞ்சரிக்கின்ற ஏழுகுதிரைகள் பூட்டின ஒற்றைச்சக்கரமுடைய தேரிலே கதிராயிரமுடையனாய் விளங்குகின்ற ஸூர்யனுடைய மண்டலத்தைப் பிளந்துகொண்டு அவ்வழியே போய் ஒரு பரமபதமென்னும் தேசத்தை அடைவதாகவும் அங்கே ஆராவமுதத்தை அநுபவிப்பதாகவும் அவ்விடத்தை விட்டு ஒருநாளும் திரும்பி வருவதில்லையாகவும் இப்படிப்பட்ட கட்டுக்கதைகளைக் கூறுகின்றார்களே விவேகிகள் இப்படி அஸம்பத்தப்ரலாபம் பண்ணுவர்களா வென்று நீங்கள் ஆராயமாட்டீர்களோ வென்கிறார், மேகமண்டலத்தில் அஸம்பாவிதம், அந்தத் தேரை ஏழுகுதிரைகள் இழுக்கவேண்டியதும் அப்ரஸக்தம், நெடுந்தூரத்தினின்றும் கண்ணைச் செம்பளித்துப் பார்க்கவும் முடியாத ஸூர்யணைப் பிளந்துகொண்டு போவதென்பது ஸர்வாத்மநா அஸம்பாவிதம் இந்நிலத்திலே ஆராவமுதமிருப்பதாகச் சொல்லுவதும், அதனை யனுபவிப்பவர் எஞ்ஞான்றும் அந்வாருஹ்யவாதம் பண்ணினாராயிற்று. (அந்வாருஹ்யவாதமாவது – உண்மையில் தமக்கு அபிமதமல்லாத பொருளை ஒரு கார்யார்த்தமாக ஏற்றுக்கொண்டு சொல்லுகை, ஜைமிநிமஹர்ஷி பூர்வமீமாம்ஸையில் நிரீச்வரவாதம் பண்ணிருப்பதை இதற்கு த்ருஷ்டாந்தமாகக் கூறலாம்).
ஓராமை –ஓர்தல் –ஆராய்ச்சி, ஓராமை –ஆராய்ச்சியில்லாமை, விவேகமின்மை கேளாமை –கேள் ஆமே என்று பிரிக்க, கேள் –முதலினிலேத் தொழிற்பெயர், கேட்கல் ஆமோ என்றபடி, கேளுங்களென்கை. புரவி – குதிரை. அதுநிற்க – மோக்ஷமென்ப தொன்று இருக்கவாவது இருக்கட்டும், அதைப்பற்றி
விவாதப்படுகை அநரவச்யகம் என்றபடி.
மோக்ஷமுண்டென்றே கொண்டாலும் அர்ச்சாவதாரத்திற் காட்டிலும் அது மிகவும் அஸாரம் என்கிறார் (ஏரார் முயல்விட்டு) என்பதனால், நிலத்திலே ஓடுவது முயல், மரங்களின் மேலே பறந்து திரிவது காக்கை, மாம்ஸம் வேண்டியவன் கைப்பட்ட முயலைவிட்டுக் கைப்பட அரியதும் கைப்பட்டாலும் உபயோகப்படாத்துமான காக்கையைப் பின்பற்றித்திரிதல் எப்படி அவிவேகிக்ருத்யமோ, அப்படியே எளிதாயும் ரஸவத்தரமாயுமுள்ள அர்ச்சாவதார போகத்தைவிட்டு அரிதாயும்
அஸாரமாயுமுள்ள மோக்ஷபோகத்தைப்பெற விரும்புகையும் பேதைமையின் பணி என்றாராயிற்று.
ஆக இதுவரையில் ஆழ்வார் தரமான தன்மையிலே நின்று பேசினதென்றும் மேலுள்ளதெல்லாம் தலைமகள் நிலைமை யெய்திப் பேசுவதென்றும் ர்வஹிப்பதுண்டு. அன்றி ஆதி முதலாகவே முற்றும் நாயகி ஸமாதியாலே பேசுகிற பாசுரமென்றும் யோஜிப்பதுண்டு. இதுவே பெரிய வாச்சான் பிள்ளை திருவுள மென்னத்தகும். இரண்டு படியும் ஏற்றதேயாம்.





