adhisankarar - 2026

ஆதி சங்கரர் அவதார தினத்தில்… அவர் குறித்த சிந்தனை!

ஆன்மிகக் கட்டுரைகள் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
adhisankarar - 2026

கேரளத்தில் பூர்ணா நதியின் கரையில் உள்ள காலடியில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு ஒரே புதல்வனாக ஸ்ரீ சங்கரர் பிறந்தார்.
இவர் பொ.ஆ. 788ல் பிறந்தார் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இவர் இளமையிலேயே குருகுலத்திற்குச் சென்று வேத – வேதாந்தங்களை முற்றும் கற்றார்.

தனது 7-வது வயதில் நதியில் முதலையால் பிடிபட்டபோது, தன்னுடைய தாயாரின் அனுமதி பேரில் சந்யாஸம் மேற்கொண்டு, துறவியாக வெளியே புறப்பட்டார். நர்மதை நதியின் கரையில் தவம் செய்து கொண்டிருந்த ஸ்ரீகோவிந்த பகவத்பாதரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் உபதேசம் பெற்றார். ஸ்ரீகுருவின் உத்தரவின்படி ஸ்ரீசங்கரர் காசி க்ஷேத்திரத்திற்குச் சென்று அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் பாஷ்யங்களை இயற்றினார்.

பாரதத்தில் உள்ள பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று பிற சமய வாதிகளிடம் வாதம் செய்து அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். பல முக்யமான இடங்களில் மடங்களை ஸ்தாபித்து தம் சிஷ்யர்களை அமர்த்தி ஸனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். பல கோவில்களுக்குச் சென்று, வழிபாடு முறைகளை சீரமைத்து, அந்தந்த தெய்வங்களின் மீது ஸ்தோத்ரப் பாடல்கள் இயற்றினார்.

இவருடைய பரம குருவான கௌடபாதரும், வியாஸரும் தனித்தனியே தர்சனம் அளித்து இவருக்கு அருள் வழங்கினர். முப்பத்திரண்டாவது வயதிலேயே, எல்லாப் பணிகளையும் பூர்த்தியாகச் செய்து பூதவுடல் களைந்து ப்ரஹ்மத்தோடு ஒன்றினார்.

ஸ்ரீ சங்கர ஜனனம்!

ஆதி சங்கரரின் சரிதத்தையும், மஹிமையையும் விளக்கி சங்கர விஜயம் என்ற தலைப்பில் நூல்கள் பல வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. காலடி எனும் கிராமத்தில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்குப் பிறந்தார் சங்கரர் என்பது பொதுப்படையான கருத்து, சங்கரரின் ஜனன காலத்தில் இயற்கையே அந்தச் சம்பவத்தை எவ்வாறு கொண்டாடியது என மாதவ – வித்யாரண்யர் தனது சங்கர விஜயத்தில் விவரிக்கிறார்.

சுபகிரகத்துடன் கூடியதும், சுபனுடைய திருஷ்டியிலுள்ளதுமாகிய சுப லக்னத்தில் சிவகுருவின் மனைவியான ஆரியாம்பாள் என்ற பதிவிருதா ரத்தினம், ஸ்ரீ பார்வதிதேவி சுப்ரமணியனைப் பெற்றதுபோல் சுகமாகப் புதல்வனைப் பெற்றாள். ஆயினும், முறைப்படி நதியில் ஸ்நானம் செய்து ஜாதகர்மத்திற்கு அங்கமாக அந்தணர்களுக்கு ஏராளமான செல்வத்தையும், பூமியையும், பசுக்களையும் தானம் வழங்கினார். அன்றைய தினத்தில், சுபாவமாகவே பகைமையுள்ள மிருகங்கள் விரோதத்தை விலக்கி சந்தோஷத்துடன் சஞ்சாரம் செய்ததுமன்றி ஒன்றுக்கொன்று உதவி செய்துகொண்டன.

மரங்களும் கொடிகளும், மலர்களையும் பழங்களையும் பொழிந்தன. நதிகளில் சுத்தமான தண்ணீர் ஓடியது. மேகமும் ஜலத்தைப் பொழிந்தது. மலைகளிலிருந்து தண்ணீர் திடீரென பெருக்கெடுத்தது.

அத்வைத மதத்திற்கு விரோதமான மதத்தைப் பின்பற்றியவர்களின் கையிலிருந்து புஸ்தகம் கீழே விழுந்தது. வேதங்களுடைய சிரஸ்ஸுகளான உபநிஷத்துக்கள் சந்தோஷமடைந்தன. ஸ்ரீ வேத வியாசருடைய இருதய கமலம் மலர்ச்சியடைந்தது. திசைகள் யாவும் மகிழ்ந்தன. பரிமள வாசனைகளுடன் காற்று ஆனந்தம் அளித்துக்கொண்டு அடித்தது. வலமாகச் சுற்றும் சுடருடன் ஜ்வலித்தன. எல்லா இடங்களிலும் அக்னிகள் அச்சமயத்தில் ஆச்சரியமாக மலர்மாரி பொழிந்தது. அது மிகவும் பரிமள வாசனையுடையதாக இருந்தது. சாதுக்களுடைய சுத்தமான மனம் போல் மங்களத்தைச் செய்கின்றதாகவும் இருந்தது. மனங்களின் நல்ல செயல்கள் அர்ப்பணம் செய்யப்பட்டன.

உலகங்களுக்கெல்லாம் கண்ணாகிய சூரியனால் மூன்று உலகங்கள் விளங்குவது போலவும், சிறந்த மேரு மலையினால் பூமி விளங்குவது போலவும், அடக்கத்தினால் கல்வி விளங்குவது போலவும், உலகில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமர் முதலிய அரசர்களுடைய தேஜஸ்ஸு அமைந்த அந்தப் புதல்வனால் ஆரியாம்பாள் விசேஷமாக விளங்கினாள்.

விசேஷமாக உபசாரம் செய்து ஜோதிடர்களை வினவியபொழுது அவர்களும் அந்தப் புதல்வனுடைய பிறவிக் காலத்துக் குணங்களை கூறினர். “இவன் ‘ஸர்வக்ஞன்’ (முற்றும் அறிந்தவன்) ஆக விளங்குவான். தனிப்பட்ட சிறந்த நூலை இயற்றுவான். பேசும் திறமை நிறைந்தவர்களை வெல்வான். இந்த உலகம் உள்ள வரையில் தன் கீர்த்தி நிலைக்கும்படியான செயலைச்செய்வான்” என்றும் கூறினர். *

  • ‘ஞான ஒளி’ மாத இதழில் வெளியான கட்டுரையில் இருந்து…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.