
- டாக்டர் ஜெ. பாஸ்கரன்
தொன்மயிலை கானமர்சோலை கபாலீச்சரம் கற்பகவல்லி அன்னை மீது ஒரு பிள்ளைத்தமிழ்! (புத்தக வெளியீட்டு விழா!).
மயிலாப்பூரில் கானமர்சோலை கபாலீஸ்வரம் என்று கொண்டாடப்படும் திரு கபாலீஸ்வரர் கோயிலில் வீற்றிருந்து அருளும் கற்பகவல்லி அன்னையின்மீது முனைவர் திருமதி. மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் இயற்றியுள்ள தெய்வீகச் சுவை நிறைந்த “திருமயிலைக் கற்பகவல்லி பிள்ளைத்தமிழ்” என்ற நூலின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை மாலை (1-5-2025) மயிலாப்பூர் கோகலே ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
திருமதி காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களுடைய இறைவணக்கத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி! சிவத்திரு பூசை ச.ஆட்சிலிங்கம் (சிவசுந்தரி இதழ் பதிப்பாளர்) அவர்கள் விழாவினைச் சிறப்பாக வடிவமைத்து தொகுத்தளித்தார்கள். பேராசிரியர் முனைவர் திரு வ.வே.சு. அவர்கள் தலைமை தாங்கி, நூலை வெளியிட, கலைமகள் ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். திருமதி சீதாரவி (மேனாள் கல்கி ஆசிரியர்), தமிழவேள், சிவாலயம் ஜெ.மோகன் (ஆன்மீக இதழ்களின் பதிப்பாளர்), ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
முதலில் பேசிய சிவாலயம் மோகன் அவர்கள், இம்மாதிரி புத்தகங்கள் அவசியம் வரவேற்கப்பட வேண்டியவை என்றார். மேலும் இந்த பிள்ளைத் தமிழிலிருந்து நான்கு பாடல்களை இசையமைத்துப் பாடிய திருமதி காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களை மிகவும் பாராட்டினார். இந்த புத்தகத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் காயத்ரி அவர்கள் இசையமைத்துப் பாடி, ஒலி வடிவில் கொண்டு வந்து சேர்க்க வேண்டியதின் அவசியத்தையும் கூறினார்.
திரு கீழாம்பூர், இந்தப் புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ள சொல் நயங்களை சிலாகித்தார். நதிகளே இல்லாத மயிலையில் கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, சிந்து மற்றும் காவிரி போன்ற நதிகளைக் ‘கற்பகவல்லி பிள்ளைத் தமிழில்’ இணைத்துப் பாடியிருப்பதை வெகுவாகப் பாராட்டினார். கற்பகாம்பாள் அருளின்றி இந்தப் புத்தகம் வெளி வந்திருக்க முடியாது என்பதற்குச் சான்றாக, அறுபத்து மூவர் விழாவின் பொழுது இந்த புத்தகத்தின் பி டி எப் பைல் அடங்கிய பென் டிரைவ் காணாமல் போய் எப்படி தெய்வாதீனமாகக் கிடைத்தது என்பதை விவரித்தார். குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
திருமதி சீதாரவி பேசும் பொழுது, மீனாட்சி பாலகணேஷ் அவர்களுடனான 25 வருட நட்பினைப் பற்றியும், மீனாட்சி, பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் பொழுதும், பொதுவாகவே அம்மன் பாடல்களைக் கேட்கும் பொழுதும் எப்படி நெகிழ்ந்து, கண்ணீர் விடுவார் என்பதையும் கூறினார். புத்தகத்திலிருந்து சில பாடல் வரிகளை எடுத்துரைத்து, சிலாகித்தார். மீனாட்சி அவர்களுக்கும், பாடிய காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களுக்கும் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
நிறைவாகப் பேசிய பேராசிரியர் வ.வே.சு. அவர்கள், மீனாட்சியின் இந்தப் புத்தகத்தை, சிற்றிலக்கியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரிய தொண்டு என்று பாராட்டினார். தன்னுடைய வழக்கமான நகைச்சுவையுடன், இந்தப் புத்தகத்தில் இருந்து சில பாடல் வரிகளை எடுத்துக் கூறி, அவற்றில் இருக்கும் இலக்கிய நயத்தை மிகவும் பாராட்டிப் பேசினார். காப்பு பருவத்தில், “தலைமகன் தந்திமுகன் தம்பியாம் முருகனுடன்// துணை நின்று தாயினைப் பரிந்தே காப்பான் என்ற அடிகளைக் குறிப்பிட்டு, மூப்படைந்த பெற்றோரைப் பிள்ளைகள் பரிந்து காக்க வேண்டும் என்ற அறிவுரையும் அடங்கியுள்ளது என்றார்.
விழாவினைத் தொகுத்தளித்த புலவர் பூசை ச.ஆட்சிலிங்கம் தன்னுடைய இணைப்புரையில் மயிலாப்பூரின் பெருமைகளையும், பிள்ளைத் தமிழ்ப் பாடல்களைக் குறித்தும் சிறப்பான தகவல்களை அளித்த வண்ணம் இருந்தார்.
ஏற்புரையில் திருமதி மீனாட்சி பாலகணேஷ், திருமயிலைக் கற்பகவல்லி பிள்ளைத்தமிழ் நூலினை எவ்வாறு மிகத் தயக்கத்துடன், மிகவும் யோசித்து, சிறிது சிறிதாக, ஒரு வருடத்தில் எழுதினார் என்பதை அழகாகச் சொன்னார். பிள்ளைத்தமிழ் பத்து அதிகாரங்கள் மேலும் வளையல் போடுதல் கோலம் வரைதல் மருதாணி ஏற்றுக்கொள்ளுதல் பூச்சூடுதல் போன்ற புதிய அதிகாரங்களையும் சேர்த்து எழுதியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். புத்தக உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்
விழாவின் சிறப்பு நிகழ்வாக மீனாட்சி பாலகணேஷ் அவர்களுக்கும் அவருடைய கணவர் பாலகணேஷ் அவர்களுக்கும் தலையிலே பட்டு கிரீடமும் தோளில் அழகிய மாலையும் சார்த்தி, வந்திருந்த அனைவரும் அவர்களை வாழ்த்தியது வித்தியாசமாகவும் பாராட்ட தகுந்ததாகவும் இருந்தது.
விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புடன்( பாதுஷா, ஜாங்கிரி) வெண் பொங்கல், புளியோதரை, சுண்டல், மெதுவடை தயிர் சாதம் என இரவு உணவு வழங்கப்பட்டது.
பக்தியுடன் இலக்கியம் கலந்த மிகச் சிறந்த விழாவாக இது அமைந்தது! விருட்சம் இசை புதிது குழுவினரும், எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களும் கலந்து கொண்டது மனதுக்கு நிறைவாக இருந்தது.
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் நூலாசிரியர் மீனாட்சி பாலகணேஷ்!
பிள்ளைத் தமிழ் பற்றி சில வரிகள்…..
தமிழ் இலக்கியங்களில் “பிள்ளைப்பாட்டு” எனவும் “பிள்ளைக்கவி” என்றும் அழைக்கப்படும் ‘பிள்ளைத்தமிழ்’ இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. இம்மாதிரி சிற்றிலக்கியங்களில் ஏறத்தாழ 196 இலக்கிய வகைகள் உள்ளதாகத் தெரிகிறது.
பெரியாழ்வார் கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை போடுவதை மிக அழகாகப் பாடியுள்ளார்; அதுவே பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம். ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊஞ்சல் எனும் பருவங்களைக் கொண்டது.
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் (குமரகுருபரர்), சேக்கிழார் பிள்ளைத்தமிழ் (திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை) போன்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறப்பானவை.





