
ஐ.பி.எல் 2025 – மும்பை vs ராஜஸ்தான் – ஜெய்ப்பூர் – 01.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
மும்பை இந்தியன்ஸ் அணி (217/2, ரியன் ரிக்கிள்டன் 61, ரோஹித் ஷர்மா 53, சூர்யகுமார் யாதவ் 48, ஹார்திக் பாண்ட்யா 48, தீக்ஷணா 1/47, ரியன் பராக் 1/12) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (16.1 ஓவர்களில் 117, ஜோஃப்ரா ஆர்ச்சர் 30, ரியன் பராக் 16, ஷுபம் துபே 15, யசஸ்வீ ஜெய்ஸ்வால் 13, துருவ் ஜுரல் 11, கர்ண் ஷர்மா 3/20, பும்ரா 2/15, போல்ட் 2/28, தீபக் சாஹர் 1/13, ஹார்திக் பாண்ட்யா 1/2 ) 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. இன்று மும்பை அணி தொட்டதெல்லாம் பொன்.
அதன் தொடக்க வீரர்கள் ரியன் ரிக்கிள்டன் (38 பந்துகளில் 61 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (36 பந்துகளில் 53 ரன், 9 ஃபோர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (23 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (23 பந்துகளில் 48 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் மிக அருமையாக ஆடினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 217 ரன் எடுத்தது.
218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மட்டையாளர்கூட இன்று சரியாக ஆடவில்லை.
எட்டாவது இடத்தில் இறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் (27 பந்துகளில் 30 ரன்) தவிர மற்ற வீரர்களான யசஸ்வீ ஜெய்ஸ்வால் (6 பந்துகளில் 13 ரன்), வைபவ் சூர்ய வன்ஷி (பூஜ்யம் ரன்), நிதீஷ் ராணா (9 ரன்), ரியன் பராக் (16 ரன்), துருவ் ஜுரல் (11 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (பூஜ்யம் ரன்), சுபம் துபே (15 ரன்), தீக்ஷணா (2 ரன்), குமார் கார்த்திகேயா சிங் (4 ரன்) என அனைத்து மட்டையாளர்களும் இன்று மும்பை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
போல்ட், பும்ரா, கர்ண் ஷர்மா, பாண்ட்யா, தீபக் சாஹார் என அனைத்து பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசினார்கள்; விக்கட் எடுத்தார்கள்.
மும்பை அணி ஆட்டத்தின் அனைத்து துறைகளிலும் இன்று சிறப்பாகச் செயல் பட்டது.
மும்பை அணியின் தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.





