தெலுங்கில்: டாக்டர் கே கீதா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“கொமஸ்தாஜ்?” ஸ்பானிஷ் மொழியில் “ஹௌ ஆர் யு?” என்றாள் மரியா.
கடையிலிருந்து வரும் வழியில் வெளி வராண்டாவில் அலீசியாவுடன் நின்று
பேசிக்கொண்டிருந்த என்னை மரியா அன்பாக அணைத்துக் கொண்டாள். அலீசியாவின் பெரிய மகள் மரியா. அருகிலிருக்கும் ‘ஹோல் புட்ஸில்’ பணி புரிகிறாள்.
“இப்படி உள்ளே வந்து உட்கார்ந்து பேசுங்களேன்” என்று எங்களை
அழைத்தாள் மரியா.
“பரவாயில்லை. வீட்டுக்குள் உட்கார்ந்து உட்கார்ந்து போரடிக்குது” என்றேன்.
“அது உன் அதிர்ஷ்டம் ப்ரியா. நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யும் என்னைப் போன்றவர்களுக்குக் கிடைக்காத வாழ்க்கை உன்னுடையது” என்றாள் மரியா.
மீண்டும் அவளே, “ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம். மணிக்கு எட்டு டாலர்கள். ஞாயிறுகளையும் சேர்த்து வாரம் பூரா கஷ்டப்பட்டாலும் எங்கள் இரு குழந்தைகளின் மேற்படிப்புக்கு என்ன செய்வது என்று கவலையாக உள்ளது” என்றாள்.
“மரியாவையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு அவன் வேறொரு பெண்ணோடு போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. வெளியில் தங்கினால் இந்த குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லை என்பதால் எங்களோடு சேர்ந்து இருக்கிறாள். இவளுடைய வாழ்க்கையின் லட்சியம் இவளுடைய பிள்ளைகளைக் கல்லூரியில் சேர்த்து பட்டதாரி ஆக்க வேண்டுமென்பது” என்றாள் அலீசியா.
“அதென்ன? கல்வி இலவசமல்லவா இங்கே?” என்று கேட்டேன்.
“பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் இலவசம். அதற்கு மேல் கல்லூரிப் படிப்பு என்றால் எங்களைப் போன்றவர்களால் செலவு செய்ய முடியாது. ஆனாலும் எனக்கு ஆசை அதிகம்” என்று பெருமூச்செறிந்தாள் மரியா.
“என் பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தார்கள். நாங்கள்
மட்டுமல்ல… எங்களைப் போல் இந்த தேசத்திற்கு வந்த எங்கள் உறவினர்கள்,
நண்பர்களின் பிள்ளைகள் அனைவரின் நிலையும் இதுவே” என்றாள் அலீசியா.
“பிள்ளைகள் சொந்தமாக வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படிப்பார்கள் என்று கேள்விப்பட்டேனே. உண்மையில் பதினெட்டு வயது வந்தவுடன் வீட்டில் தங்காமால் வெளியில் சென்று விடுவார்களாமே” என்று நான் கூறிக் கொண்டிருக்கும் போதே மரியா குறுக்கிட்டாள்.
“எல்லா குடும்பங்களும் அப்படி இருக்காது, ப்ரியா. அதிலும் கூட்டுக் குடும்பம்
பழக்கமான மெக்சிகன் சமூகத்திருந்து வந்த எங்கள் வீடுகளில்” என்றாள் மரியா.
“உங்களுக்கும் எங்களுக்கும் பழக்க வழக்கங்களில் நிறைய ஒற்றுமை இருக்கிறதே” என்று வியப்போடு கூறினேன்.
மாலைச் சூரியனின் இறுதிக் கிரணம் கூட மறைந்து போகும் வரை எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
“பாவம். அவர்கள் வீட்டில் யாரும் இன்டர்மீடியட் தாண்டி படிக்கவில்லையாம்” இரவு உணவின் போது என் கணவன் சூர்யாவிடம் கூறினேன்.
“அது சரீ. நீ எதோ காலேஜில் சேர்ந்து படிக்கப் போகிறேன் என்றாயே. விவரங்கள் சேகரித்தாயா?” என்று கேட்டான்.
“இன்னும் இல்லை. நாளை ப்ரசாந்தி வருகிறாள். கேதரின் வீட்டுக்குச்
செல்லலாமென்று இருக்கிறோம். அவள் படிக்கும் காலேஜ் பற்றி கேட்டறியலாம் என்று” என்றேன்.
“என்ன கோர்சில் சேரப் போகிறாய்?” என்று கேட்டான் சூர்யா.
“அதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்டர்மீடியட்டில் எம்பிசி
எடுத்திருந்தேன். கம்ப்யூடர் இன்ஜினியரிங் சேரவா?’ என்று கேட்டேன்.
“அது என்ன? நீதான் ஏற்கெனவே போஸ்ட் கிராஜுவேட் செய்துள்ளாயே? மீண்டும் டிகிரி எதற்கு?” என்றான்.
“அதுதான் பாயின்ட். நான் படித்த என் தாய் மொழியில் பிஹெச்டிக்கு அப்ளை
செய்யலாமென்றால், ஏதாவது யுனிவர்சிட்டி ஆஃபர் செய்கிறதா என்ன? இல்லாவிட்டால் போனால் போகிறது, வேறு எதாவது பிஜி செய்வோமென்றால் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் என்னவோ? அப்படியே படித்தாலும் இங்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ” என்றேன் நான்.
“ஓஹோ, அதுவா சங்கதி? இங்க பாரு ப்ரியா, வேலையில் சேர்வதுதான் முக்கியம் என்று நினைத்து படிக்கும் யோசனையை விட்டு விடு. உனக்கு எந்த சப்ஜெக்ட் பிடிக்குமோ அதையே படி” என்றான் சூர்யா.
“உனக்குப் புரியாது இதெல்லாம்” என்றேன் முகத்தை திருப்பிக் கொண்டு.
“அது என்ன? புரியும்படித் தான் சொல்லேன். சரி சரி. எங்க ஆபீசில் யாரிடமாவது விசாரித்து சொல்கிறேன்” என்று ஆதரவாகக் கூறினான்.
சூர்யாவிடம் ஒரு நல்ல குணம் உள்ளது. என் முகத்தில் மகிழ்ச்சி குறைந்தால் உடனே பேச்சை மாற்றி விடுவான்.
“சொல்ல மறந்து விட்டேன். இந்த வீகெண்ட், லாங் வீகெண்ட். சாந்தா க்ரூஜ் போவோமா? அங்கே உனக்கு பிடித்தமான கடல் இருக்கு” என்றான்.
கடல் என்று சொன்னவுடன் என் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பார்த்து, “ம்ம். இப்படி இருக்கணும். ஹாப்பியா” என்றான்.
கேதரின் போனில் கிடைக்கவில்லை. இமெயில் அனுப்பினேன். அவள் இந்த வாரம் பிசியாக இருப்பதாகக் கூறி, கல்லூரி விவரங்கள் வெப் சைட்டில் பார்க்கச் சொல்லி லிங்க் அனுப்பினாள்.
கோர்சுகளை விட ஃபீஸ்களைப் பற்றி அறிய ஆர்வத்தோடு என் விரல்கள் வெப் சைட்டில் தேடின. அதிலிருந்த எண்களைப் பார்த்ததும் என்னைப் பெரும் திகில் பற்றிக் கொண்டது. செமெஸ்டருக்கு ஃபாரின் மாணவர்களுக்கு பத்தாயிரம் டாலர்களை விட அதிகம். இன்னும் தகுதிப் பட்டியலில் கட்டாயம் ஆங்கில மொழித் தேர்ச்சியை நிர்ணயிக்கும் டோஃபெல் பாஸாக வேண்டும். இன்னும் என்ஜினியரிங்குக்கு SAT அலல்து ACT பரிட்சைகள், MBA க்கு வேறொன்று, வேறு ஏதாவது கோர்ஸ் என்றால் மற்றொன்று.
மதியம் ப்ரசாந்தி வந்தாள்.
“காலையிலிருந்து வெப் சைட்டில் காலேஜ் விவரங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.
“அதுதான் தெளிவாக உன் முகத்திலேயே தெரிகிறதே” என்றாள் என் ஏமாற்றத்தைக் கண்டு.
“ஆமாம். ஏகப்பட்ட ஃபீஸ். எங்களால் நிச்சயம் கட்ட இயலாது” என்றேன்
முணுமுணுப்பாக.
“பார்க்கலாம். நிராசை அடையாதே” என்றாள் பிரசாந்தி என் தோளைத் தட்டி.
“கம்யூனிட்டி காலேஜில் ஃபீஸ் மிகவும் குறைவாக இருக்குமாம், விசாரித்தேன்”
என்றாள்.
“அப்படியா? நல்ல விஷயம் சொன்னாய்” என்றேன் சந்தோஷமாக. “நான் போய் தேநீர் போட்டு எடுத்து வருகிறேன். நீ அதற்குள் வெப் பேஜ் ஓபன் செய்து பார், ப்ரசாந்தி” என்று கூறி எழுந்தேன்.
அவள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாவ். செமஸ்டர் கட்டணம் சுமார் முன்னூறு டாலர் குறைவு” என்றவள், “ஆனால் நமக்கு ஃபாரின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டுக்கும் சேரும், தெரியுமா?” என்று கேட்டாள்.
புரியவில்லை என்பது போல் தலையை அசைத்து, “அது எப்படி?” என்று கேட்டேன்.
“நாம் ‘சார்ந்து இருப்பவர்கள்’ அதாவது டிபென்டென்ட். ஆனாலும் கூட நம் பெயர் மீது டாக்ஸ் ஐடென்டிடி நம்பர் வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு ஒரு ஆண்டு டாக்ஸ் பே செய்தோமென்றால் நாம் இங்கு ரெசிடென்ட்ஸ் ஆகி விடலாம். சுமார் எல்லா காலேஜிலும் இங்கு ரெசிடென்ட்சுக்கு ஃபாரின் ஃபீஸில் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்திலேயே அட்மிஷன் கிடைக்கும்” என்றாள்.
“அப்படியென்றால் நாம் வரும் ஆண்டிலேயே சேர்ந்து படிப்பது நல்லது. அதுவுமின்றி இப்போது நாம் பார்த்த இந்த ஃபாரின் ஃபீஸ் அதாவது பன்னிரெண்டு மாதங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு கட்டினால் போதும்” என்று கூறிவிட்டு, கிடுகிடுவென்று கணக்கு போட்டுப் பார்த்து, “அதாவது ஒரு செமெஸ்டருக்கு நான்காயிரம். அம்மாடியோ, அது கூட அதிகம்தான். எங்களால் கட்ட முடியாது” என்றேன்.
எனக்கு திடீரென்று மரியாவின் திகிலான முகம் நினைவுக்கு வந்தது. அவள் ஏன் அத்தனை வருத்தப்பட்டாள் என்பது இப்போது புரிந்தது.
“பார்த்தாயா? ஸ்டான்போர்ட் போன்ற புகழ்பெற்ற பிரைவேட் யுனிவர்சிடியிலில் என்றால் ரெசிடென்ட் ஃபீஸே செமெஸ்டருக்கு பதிமூன்று ஆயிரத்துக்கும் மேல். யாரால் படிக்க முடியும்? எப்படிப் படிப்பார்கள் இந்த தேசத்த்தில்?” என்றாள் பிரசாந்தி.
“ஸ்காலர்ஷிப்ஸ், கேம்ப்பஸ் வேலை வாய்ப்புகள், இதெல்லாம் நமக்கு இல்லை. இங்கும் நமக்கு வழிகள் அடைப்பட்டு விட்டன போலிருக்கிறது” என்று உதட்டை பிதுக்கினேன்.
அதற்குள் கேதரின் போன் செய்தாள்.
“ஹாய் ப்ரியா, நான் இன்று சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டேன். பிள்ளைகளை
அழைத்துக் கொண்டு பார்க்குக்கு வருவேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டாள்.
“ப்ரசாந்தி கூட இங்கே இருக்கா” என்றேன்.
“இன்னும் என்ன? நல்லதாப் போச்சு. இருவரும் வாங்க. நல்லா பேசலாம்” என்றாள் கேதரின்.
நான் என் மகள் நிதியையும் உடன் அழைத்துச் சென்றேன். பிள்ளைகள் பூங்கா மணலில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். கடற்கரை மணல். நைசாக இருந்ததால் விளையாட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
“அவர்களைப் போல் விளையாட முடியாவிட்டாலும் காலை மணலில் அளைந்து கொண்டே உட்காரலாம்” என்று சொன்னேன். மூவரும் சிரித்துக் கொண்டே அமர்ந்தோம்.
ஜூன் மாத மாலை வெளிச்சம் மர இலைகளின் இடையிலிருந்து ஆகாய தீபத்திற்கு துளைகள் விழுந்ததா என்று நினைக்கும்படியாக அங்கங்கே துண்டு துண்டாக பூமியில் படர்ந்திருந்தது.
காற்று வடமேற்கு திசையாக வீசிக் கொண்டிருந்தது. குளிரோ வெயிலோ அதிகம் இல்லாமல் சுகமாக இருந்தது. வீட்டில் யோசித்து யோசித்து வெப்பமாகிப் போன என் தலைக்கு அந்தக் காற்று இதமாக இருந்தது.
“யு ஸீ ப்ரியா, எங்கள் காலேஜில் ஐம்பது வயதுள்ள பெண் ப்ரொபசர் இன்னும் தன் கல்லூரி படிப்புக்காக வாங்கிய கடனை அடைத்து வருகிறார்” என்று கேதரின் எங்கள் ஃபீஸ் ஆராய்ச்சி பற்றி கேட்டவுடன் கூறினாள்.
மேலும், “இந்த தேசத்து துரதிருஷ்டங்களில் இதுவும் ஒன்று. கட்டுப்பாடின்றி
அதிகமாகி வரும் காலேஸ் ஃபீஸ்களை தடுப்பது யாராலும் முடியவில்லை. முழு நிர்வாகமும் ஊழலில் ஊறிப் போயிருக்கு. கடந்த பத்தாண்டுகளில் பப்ளிக் காலேஜ்களில் கட்டணம் இருமடங்கு பெருகியுள்ளது. ப்ரைவேட் காலேஜ்களில் எப்போதுமே கட்டணம் ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை தொட்டிருக்கும். அவையும் இப்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இனி மீதி உள்ள கம்யூனிட்டி காலேஜ்கள் போன்றவை இவற்றோடு ஒப்பிட்டால் சீப்தான். ஆனால் அவை நான்கு ஆண்டு டிகிரி அளிக்காது. வெறும் இரு ஆண்டு டிப்ளமா போன்ற கோர்சுகளை ஆஃபர் செய்யும். வேண்டுமானால் அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று, நான்கு ஆண்டுகளை வேறெங்காவது பப்ளிக் யுனிவர்சிடியில் டிரான்ஸ்பர் செய்து கொண்டு டிகிரி பூர்த்தி செய்யலாம். ஆனால் நல்ல கல்லூரியில் படித்தவர்களின் கல்வியறிவின் மீதே அனைத்து கம்பெனிகளும் குறி வைக்கின்றன. வேலை உடனே கிடைக்க வேண்டும் என்பதற்காக பணம் அதிகம் செலவானாலும்
பரவாயில்லை என்று ‘நல்ல கல்லூரி’ என்று பெயர் பெற்ற பணக்கார கல்லூரிகளில் சேர வேண்டியுள்ளது” என்றாள்.
“சாரி. ரொம்ப பயமுறுத்திடேனா?” என்று கேட்ட கேதரின், “உங்கள் தேசத்தில்
கல்வியின் நிலைமை என்ன?” என்று வினவினாள்.
“இந்தியாவில் காலேஜ் ஃபீஸ் இப்படி இருந்திருந்தால் நாங்கள் இருவரும் பிஜி
படித்திருக்கவே முடியாது” என்றோம் நாங்கள் இருவரும்.
“நான் முப்பத்தைந்து வயது வரும் வரை வெறும் பட்டப்படிப்பு கூட படிக்க
முடியாமல் போனேன் என்றால் இவையே காரணம். விக்டரை திருமணம் புரிந்து கொள்ளும் வரை நான் படிக்கும் ஆசையையே விட்டிருந்தேன். ஹைஸ்கூல் படிப்போடு திருப்தியடைந்தேன். நீண்ட காலம் பலப்பல இடங்களில் வரவேற்பாளராக பணி புரிந்தேன்” என்றாள் கேதரின்.
“இதற்கு உங்கள் அரசாங்கம் என்ன செய்கிறது? மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டாள் பிரசாந்தி.
புன்னகை செய்த கேதரின், “மாணவர்கள் செய்வதை மாணவர்கள் செய்வார்கள். அரசாங்கம் செய்வதை அரசாங்கம் செய்யும்” என்றாள் விட்டேத்தியாக.
“எந்த நாடாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களில் ஒன்று போலவே நடந்து கொள்கின்றன” என்று பெருமூச்செறிந்தாள் பிரசாந்தி.
“விக்டர் வரும் நேரமாகி விட்டது. ஆறு, ஆறரைக்கெல்லாம் டின்னர் ரெடி
செய்யாவிட்டால் மறுநாள் முழுக்க கஷ்டமாகிவிடும்” என்று கூறிக் கொண்டே
எழுத்தாள் கேதரின்.
“நாங்கள் இன்னும் பன்னிரண்டு மணிக்கு லஞ்ச், ஆறு மணிக்கு டின்னருக்கு பழக்கமாக வில்லையாதலால் இன்னும் சற்று நேரம் இங்கேயே அமர்ந்திருந்து விட்டுச் செல்வோம்” என்று கூறினோம்.
பூங்காவில் நிதி மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். எத்தனை முறை மணற்கோயில் இடிந்து விழுந்தாலும் விடாமல் மீண்டும் கட்டிக் கொண்டிருந்தாள் நிதி.
“தண்ணீர் இல்லாமல் வெறும் மணலால் கோயில் கட்டினால் நிற்காதுடா, கண்ணா” என்றேன்.
ஏதோ புரிந்தாற்போல் பிரசாந்தி என்னைத் திரும்பிப் பார்த்து சிரித்தாள்.
“அனுகூலமில்லாத சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிடாத சிறந்த குணம்
இல்லாவிட்டால் மனிதன் புதுப்புது கண்டுபிடிப்ப்புகளை செய்திருக்க மாட்டானோ என்னவோ” என்றாள்.
(அமெரிக்காவைப் பற்றி கேள்விப்படுவதற்கும் நேராக அங்கு வாழ்வதற்கும் இடையில் இருக்கும் கோட்டினை தெளிவாகச் சுட்டும் முயற்சியே இந்தக் கதைகள் என்று தன் ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு சாட்சியாக’ என்ற தொகுப்பில் கதாசிரியை முனைவர். கே. கீதா தெரிவிக்கிறார்).