மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் முதலில் வரவேற்பவன் நானே: ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்:

கருணாநிதி நலமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்ததால் தான் நாமக்கல்லில் நடந்த இளைஞரணி விழாவில் பங்கேற்றேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞரணியின் சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நேற்று நடந்தது.

தி.மு.க. பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன என்று சொன்னால், எல்லா நிகழ்ச்சிகளிலும் அறக்கட்டளையின் தலைவர் என்ற முறையில் நானும் முழுமையாக பங்கேற்பதுண்டு. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில், என்னால் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். நம்முடைய தலைவர் கருணாநிதி சிறிது உடல் நலன் பாதிக்கப்பட்டு, அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கட்டாயம் ஏற்பட்டு, நான் மருத்துவமனையில் அவருடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பிறகு தலைவர் உடல் நலம் தேறி, அவருக்கு சிகிச்சை செய்து வரும் மருத்துவர்கள், “நீங்கள் தாராளமாக நிகழ்ச்சியில் சென்று பங்கேற்கலாம், தலைவர் நலமோடு இருக்கிறார், நீங்கள் எந்த கவலையும் பட வேண்டிய அவசியம் இல்லை”, என்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன பிறகு தான், சென்னையிலிருந்து புறப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

தொடர்ந்து 9 ஆண்டுகளாக அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இதுபோன்ற போட்டிகளை, நிகழ்ச்சிகளை நடத்தி இன்றுடன் 13,104 மாணவ, மாணவியருக்கு மொத்தம் 2 கோடியே 90 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அண்ணா பிறந்தநாள் மற்றும் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் ஆகிய இரண்டு விழாக்கள் மூலமாக இதுவரை தி.மு.க. இளைஞரணியின் சார்பில் 17,961 மாணவ, மாணவிகளுக்கு, 6 கோடியே 69 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

இங்கே இருக்கக் கூடியவர்கள் உங்கள் உள்ளத்திலே என்ஜினீயராக, டாக்டராக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்கள். என்னதான் அந்த நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று கருதிக்கொண்டு இருந்தாலும், ஒன்றை நீங்கள் மறந்து விடக்கூடாது. இந்த நாட்டினுடைய நலனை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். நாடு நன்றாக இருந்தால் தான் நாமும், நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினரும் நன்றாக இருந்திட முடியும். அந்த உணர்வை மாணவச் செல்வங்களாகிய, இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அதே நேரத்தில் உங்களை நான் இன்னொன்றும் கேட்டுக்கொள்ள விரும்புவது, நீங்கள் அரசியல்வாதிகளாகவும் வர வேண்டும் என்பதும் எனக்கு ஆசை தான். நீங்கள் அரசியல்வாதியாக வந்தால் முதலில் அதை இருகரம் கூப்பி வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன். உங்களை நான் அரசியல்வாதிகளாக வர வேண்டும் என்று கூறுவதற்கு காரணம், எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு அது ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கிடும் வகையில் அமைந்திட முடியும். அதேபோல, உங்களைப் போன்றவர்களுக்கு எங்களைப் போன்ற அரசியல்வாதிகளும் தேவைப்படுகிறார்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

புதிய தொழில்நுட்பங்கள் நாட்டிலே உருவாக வேண்டும் என்று சொன்னால், உங்களைப் போன்ற மாணவர்கள் தான் அதனை செய்ய முன்வர வேண்டும். எனவே, நீங்கள் வர வேண்டும், வெற்றிகளைப் பெற வேண்டும், அப்படிப்பட்ட ஒரு சாதனையை ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.