chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட்: நிறைவு நாளில்!

விளையாட்டு Featured இந்தியா சற்றுமுன் தமிழகம்
chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம்
பதினோராம் நாள் – 09.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆண்கள் பிரிவில் பத்தாம் நாள் ஆட்ட முடிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆர்மேனியா 17 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இந்தியா B அணி 16 புள்ளிகளுடனும் இந்தியா A அணி 16 புள்ளிகளுடனும் முறையே மூன்று, நான்காம் இடத்திலும் இருந்தன.

பதினோராம் நாள் ஆட்டத்தில் உஸ்பெஸ்கிஸ்தான், ஆர்மேனியா, இந்தியா B அணி ஆகிய மூன்று அணிகளுமே வென்றாதால், மூன்று அணிகளும் தங்கள் முதல் மூன்று இடங்களை முறையே தக்கவைத்துக் கொண்டன.

இந்தியா B அணியின் 16 வயது நிரம்பிய D. குஹேஷ் தனது முதல் எட்டு ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்திருந்தார். ஆனால் ஒன்பதாவது ஆட்டத்தில் உக்ரேன் வீரரிடம் தோற்றுப் போனார். அந்த ஆட்டத்திலும் பெருமளவு நேரம் குஹேஷ் வெற்றி பெறும் நிலையில் இருந்தார்.

சிறப்பாக விளையாடியதால் குஹேஷ் போர்ட் 1 ஆட்டங்களில் 11 ஆட்டங்களில் 9இல் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் பெற்றார். போர்ட் 2இல் நிஹால் சரின் 7.5 புள்ளிகளுடன் தங்கம் பெற்றார். அர்ஜுன் எரிகைசி வெள்ளிப் பதக்கம் பெற்றார். போர்ட் 3இல் பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார். பெண்கள் பிரிவில் பத்தாம் நாள் முடிவில் ஐந்து அணிகள் பதக்கம் பெறுவதற்கான வாய்ப்போடு இருந்தன.

இந்தியா A அணி 17 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. போலந்து, அசர்பைஜான், உக்ரேன், ஜியார்ஜியா ஆகிய நான்கு அணிகளும் 16 புள்ளிகளுடன் அடுத்த நான்கு இடங்களில் இருந்தன. பதினோராம் நாள் இந்திய A பெண்கள் அணி அமெரிக்காவை எதிர்த்தும், போலந்து உக்ரைனை எதிர்த்தும், அசர்பைஜான் ஜியார்ஜியாவை எதிர்த்தும் விளையாடின.

இந்தியா A பெண்கள் அணி அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றுப்போனது. இந்தியா A பெண்கள் அணிக்கு ஏழு தொடர் வெற்றிகளுக்குப் பிறகு எட்டாவது சுற்றில் உக்ரேனுடன் ஒரு ட்ரா, ஒன்பதாவது சுற்றில் போலந்துடன் ஒரு தோல்வி என பின்னடைவு ஏற்பட்டது.

நேற்று தானியா சச்சதேவ் மற்றும் குல்கர்ணி பக்தி இருவரும் அமெரிக்க வீராங்கனைகளிடம் தோற்றானர். கோனேரு ஹம்பி, வைஷாலி இருவரும் ட்ரா செய்தனர். அதே நேரம் போலந்து அணியை உக்ரேன் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது; ஜியார்ஜியா அணி அசர்பைஜான் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. எனவே குழு அளவில் உக்ரேன் முதலிடத்தையும், ஜியார்ஜியா இரண்டாம் இடத்தையும் இந்தியா A பெண்கள் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

இந்தியா A பெண்கள் அணியைச் சேர்ந்த வைஷாலி, தானியா சச்சதேவ், ரிசர்வ் விளையாட்டு வீராங்கனை திவ்யா தேஷ்முக் மூவரும் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் வைஷாலி மூன்றாவது போர்டில் விளையாடினார்; ஆண்கள் பிரிவில் பிரக்ஞானத்தாவும் மூன்றாவது போர்டில் விளையாடினார்.

அதனால் அக்காவும் தம்பியும் அருகருகே பதக்கங்களுடன் பதக்க மேடையில் நின்று புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிட்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.