spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ரூ.1000, 500 தாள்களின் மதிப்பு எவ்வளவு? விளக்கம் கேட்கிறார் ராமதாஸ்

ரூ.1000, 500 தாள்களின் மதிப்பு எவ்வளவு? விளக்கம் கேட்கிறார் ராமதாஸ்

சென்னை:
ரூ.1000, 500 தாள்களின் மதிப்பு எவ்வளவு? முரணான தகவல்கள் பற்றி விளக்கம் தேவை! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 தாள்களை வங்கிகளில் செலுத்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. இவை வங்கிகளில் பணம் செலுத்த செல்வோரை குற்றவாளிகளாக பார்க்கும் செயலாகும். அதுமட்டுமின்றி, இத்தகையக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் மத்திய அரசிடம் அளவுக்கதிகமான பதற்றம் தெரிவதையும் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000, ரூ.500 தாள்கள் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த போது பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வரவேற்றன. மத்திய அரசின் இந்நடவடிக்கையாயால் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் ஒழிக்கப்படும்; அந்த பணத்தின் மதிப்பு அரசின் கணக்கில் சேர்க்கப்படும் என்று ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த 13-ஆம் தேதி வரை ரூ.12.44 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.1000, ரூ.500 தாள்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் காந்தி அறிவித்தார். அதன்பின் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்பட்ட நிலையில் குறைந்தபட்சம் ரூ.1.56 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாக வைத்துக் கொண்டால் கூட, மொத்தம் ரூ.14 லட்சம் கோடி பழைய தாள்கள் நேற்று வரை வங்கிகளில் திரும்பச் செலுத்தப்பட்டிருக்கலாம்; அதனால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் சிக்கும் என்ற கனவு சிதைந்தது கூட இப்பதற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்.
இதை உறுதி செய்யும் வகையில் ஏராளமான புள்ளி விவரங்களும், ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று நவம்பர் 8&ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த  சிறிது நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி அன்றைய தேதியில் புழக்கத்தில் இருந்த பழைய தாள்களின் மதிப்பு ரூ.14.95  லட்சம் கோடி ஆகும் (The Reserve Bank of India (RBI) estimates that there are 16.5 billion 500 rupee notes and 6.7 billion 1000 rupee notes currently in circulation). அதன் பின்னர் நவம்பர் 29-ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,‘‘ நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டிருந்த பழைய தாள்களின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி  (There were 17,165 million pieces of Rs 500 notes  and 6,858 million pieces of Rs 1,000 notes (Rs 8.58 lakh crore in Rs 500 notes and Rs 6.86 lakh crore in Rs 1,000) in circulation on November 8, 2016)’’ என்று தெரிவித்திருந்தார். இந்த இரு புள்ளி விவரங்களுக்குமிடையே வேறுபாடு இருந்தாலும், வித்தியாசத்தின் மதிப்பு அவ்வளவு அதிகமாக இல்லை.
ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டதாகக் கூறி நேற்று வெளியிடப்பட்ட தகவல், முந்தைய புள்ளிவிவரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது.  மும்பையைச் சேர்ந்த அனில் கல்காலி என்ற சமூக ஆர்வலர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவல்களில், ‘‘நவம்பர் 8-ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுகையில்  ரூ.9.13 லட்சம் கோடி மதிப்புக்கு ரூ.1000 தாள்களும்,  ரூ.11.38 லட்சம் கோடி மதிப்புக்கு ரூ.500 தாள்களும் இருந்தன (On November 8, it had Rs 9.13 lakh crore in 1,000 rupee notes while Rs 11.38 lakh crore in 500 rupee notes.)’’ என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூ.20.51 லட்சம் கோடி இருந்ததாக இந்த தகவல் தெரிவிக்கிறது.
மேற்கண்ட மூன்று தகவல்களுமே இந்திய ரிசர்வ் வங்கியில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இருந்த ரூ.1000, ரூ.500 தாள்களின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்தவை தான். இவற்றில் இரு தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியாலும், ஒரு தகவல் மத்திய நிதியமைச்சராலும் வழங்கப்பட்டவை. ஆனால், மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் முன்னுக்குப் பின் முரணாக உள்ள நிலையில், இவற்றில் எது சரியானது என்பதை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசு எதிர்பார்த்தவாறு, சொல்லிக்கொள்ளும் வகையில்  கருப்புப் பணம் பிடிபடப் போவதில்லை. காரணம் கருப்புப் பண முதலைகள் அனைவருமே தங்களிடமிருந்த  பணத்தை உரியவர்களின் உதவியுடன் வெள்ளையாக மாற்றி விட்டனர். இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் கொஞ்சமாவது கருப்புப் பணத்தை பிடித்து விட்டதாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் மத்திய அரசு, அதற்காக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 தாள்களில் மதிப்பை திடீரென ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துக் காட்ட முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.  பழைய ரூபாய் தாள்களை வங்கியில் செலுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள புதியக் கட்டுப்பாடுகள் கூட இதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கலாம் என்ற ஐயத்தையும் புறந்தள்ள முடியவில்லை.
வங்கிகளில் இம்மாத இறுதிவரை ஒரே ஒருமுறை மட்டுமே ரூ. 5 ஆயிரத்திற்கும் மேல் பணம் செலுத்த முடியும்; அவ்வாறு செலுத்த வருபவர்களிடம் வங்கி அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி முழு திருப்தி அடைந்தால் மட்டுமே பணத்தை பெற்றுக் கொள்ளும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல. வங்கிக்கு வருபவர்களை வாடிக்கையாளர்களாக பார்க்காமல், குற்றவாளிகளாக நினைத்து விசாரிப்பது முறையல்ல. வங்கிகள் வங்கிகளாக இருக்க வேண்டுமே தவிர காவல்நிலையங்களாகவோ, நீதிமன்றங்களாகவோ மாறக்கூடாது. கருப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில்,  அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத அரசு, ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருபவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவறு; இதை கைவிட வேண்டும்.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நாளில் ரிசர்வ் வங்கி ஆளுகையில் இருந்த பணத்தின் மதிப்பு குறித்து முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், அது குறித்த உண்மை நிலையை மத்திய அரசு விளக்க வேண்டும். அத்துடன், புதிய ரூபாய் தாள்களை  அதிக அளவில் வெளியிட்டு பணத் தட்டுப்பாட்டையும், மக்களின் அவதியையும் போக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe