
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார். நான்கு மாதங்களில் கவிழ்ந்து விடும் என சொன்ன ஆட்சி இன்றும் தொடருகிறது. அந்த அதிசயம் நேற்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும்.. – கமல் 60 நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!
மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என இரண்டு ஆண்டுகளுகு முன் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள், ஆனால் அதிசயம் நடந்துள்ளது, ஆட்சி தொடர்கிறது என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
அரசியல் அதிசயம்!
அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.ஒரே படத்தில் பத்து கதாபாத்திரங்களில் நடிப்பது , 60 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருப்பது கமலஹாசனால் மட்டுமே முடியும் என்றும் ரஜினி புகழாரம் சூட்டினார்.
நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, பின்னணி பாடகராக ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது இந்த உலகில் கமல்ஹாசன் மட்டுமே என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். குழந்தையாக கமல் நடித்தபோதே அவர் படத்தை பார்த்து வியந்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். “கமல்ஹாசன் ஒரு அறிவு ஜீவி என்றும், அவர் தனக்குத் தெரிந்ததை எல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறார் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
கமல் பேசுவது புரியவில்லையென சிலர் கூறுவதாக தெரிவித்த ரஜினிகாந்த், தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா? என கேள்வி எழுப்பினார். கமல் பேசுவது ரஜினிக்கு புரியும்போது மக்களுக்குப் புரியாமல் இருக்குமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எங்கள் நட்பை யாராலும் உடைக்க முடியாது என்றும், வேறு துறைக்கு சென்றாலும், சிந்தாந்தம், கொள்கை வேறாக இருந்தாலும் நட்பு மாறாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இயக்குனர் சந்திரசேகர் பேச்சு – சரத்குமார் பதில் !
தற்போது நடந்து வரும் கமல் 60 நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பேசி வருகின்றனர்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது அரசியலில் கமல்-ரஜினி இணைந்து செயல்பட வேண்டும் எனப் பேசினார்.
அடுத்து பேசிய நடிகர் சரத்குமார் “ரஜினியும் கமலும் சேர்ந்து அரசியலுக்கு வருவது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது குறித்து, சட்டமன்றமாக இருந்திருந்தால் தகுந்த பதில் கொடுத்திருப்பேன். இந்த மேடையை அதற்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்றார்.
இவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் சரத்குமார் சட்டமன்ற உறுப்பினராக தற்போது இல்லை, மறந்து போச்சா? எனக் எதிர்க் குரல்கள் எழுப்பினர்.


