பாஜக., இருக்கும் வரை… ஸ்டாலினை முதல்வர் ஆக விடமாட்டோம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம்
muralidhara rav - 2026

கிருஷ்ணகிரியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேசியபோது, ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது என்று கூறினார். மேலும், சிஏஏ.,வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருந்தாலும் அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என முக ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் சவால் விடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. அண்மையில் சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சிஏஏவில் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருந்தாலும் அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் ஸ்டாலின் குறித்து அவர் கூறிய போது, தமிழகத்தில் முதல்வர் ஆவதற்கான அதிர்ஷ்டம் இல்லாத மனிதர் ஸ்டாலின் என்று கருத்து தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூட மோடியை பற்றி பேசுவது இல்லை ஆனால் மூன்று வேளையும் ஸ்டாலின் சென்னையில் இருந்து மோடியை பற்றி பேசுகிறார். பிறகு எவ்வாறு ஸ்டாலின் முதல்வர் ஆக முடியும்? தமிழகத்தில் பொய் கூறி இனி ஸ்டாலினால் எதுவும் செய்ய இயலாது என்றார் அவர்.

சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் மசூதிகளும், இஸ்லாமியர்கள் எண்ணிக்கையும் குறைந்து உள்ளதா அதிகரித்து உள்ளதா என சிந்தித்து பார்க்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் 24 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 2 சதவீதமாக குறைந்து உள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருக்கின்றனர். அதனால் தான் மஹாத்மா காந்தி அங்குள்ள இந்துக்கள் இந்தியா வந்தால் பாதுகாப்பு அளிக்கும் என்றார். காந்தியின் வழியில் தான் பிரதமர் மோடியும் செல்கிறார்.

இதைக் கண்டால் ஏன் ஸ்டாலினுக்கு தலைவலியிம், வயிற்று வலியும் வருகிறது? தமிழக முதல்வர் பழனிச்சாமி மோடியின் கைப்பாவை என ஸ்டாலின் விமர்சிக்கிறார். பிரதமர் கையில் வைத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை! ஆனால் பாகிஸ்தானில் இருக்கும் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக இருக்கிறார் ஸ்டாலின். அதற்கு தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்!

தமிழக ஆட்சி தானாக விழும் என ஸ்டாலின் காத்துகொண்டு இருக்கிறார். பாஜக இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டோம்… என்றார் முரளிதர்ராவ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.