
சென்னை:
சென்னை ஐஐடி., வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து நடத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கால்நடை வணிக விதிமுறையில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக இடதுசாரிகள் அதிகமுள்ள கேரளாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன், காங்கிரஸார் சிலரும் கைகோர்த்தனர். அவர்கள் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கேரளத்தில் நிகழ்ந்ததைப் பார்த்து, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் தூண்டுதலில், ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தினர். இதில், 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கி வந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து உண்டனராம். இதை மாட்டிறைச்சித் திருவிழா என்ற பெயரில் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த கேரளத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சூரஜ்க்கு சக மாணவர்கள் தர்ம அடி கொடுத்தனர். ஹால்டல் கேண்டீனில் மதிய உணவு வேளையின் போது சுமார் 7 மாணவர்கள் சேர்ந்து சூரஜ் மீது தாக்குதல் நடத்தினராம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வலதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் சூரஜின் வலது கண் கடுமையாக காயம் அடைந்துள்ளது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் குறித்து டீன்-இடம் மாட்டிறைச்சித் திருவிழா நிகழ்ச்சி நடத்திய மாணவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மாட்டிறைச்சி உண்ணுவது உரிமை எனப் போராடுபவர்களுக்கு இருந்தால், மாட்டை புனிதமாகக் கருதி அவற்றைப் பாதுகாப்பவர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் கோஷம் இட்டனர்.



