மதுரை:
உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் வரன்முறையற்ற வகையில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மத்திய அரசு, விவசாயப் பணிகள் அல்லாத, இறைச்சி நோக்கத்தில் மாடுகளை, கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரன்முறைப் படுத்தும் புதிய உத்தரவை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:-
கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்தது. மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டது.