கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காவேரிப்பட்டணம் தேர்வுநிலை பேரூராட்சி குப்பை கிடங்கில் குப்பையைக் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த மறியல்!
காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்டு 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்க பஞ்சாயத்தில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை சேகரிக்கும் இடம் அமைந்துள்ளது. இந்தக் கிடங்கு மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது.
காரணம், காவேரிப்பட்டணத்தில் உள்ள அனைத்து வார்டுகளின் குப்பைகளையும் சப்பானிபட்டி அருகில் சொந்த நிலம் வாங்கி அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்ட வேண்டும் என்று அரசு அனுமதித்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் தற்போது தேர்வு நிலை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், மூடப்பட்டிருந்த கிடங்கை திறந்து குப்பைகளை கொட்டியுள்ளனர்.
இதற்கு, அப்பகுதியில் வாழும் மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து அங்கு குப்பைகளை கொட்டக் கூடாது என்று கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏனென்றால் குப்பைக் கழிவுகள் கோழி கழிவுகள் இறந்த நாய் மற்றும் மருத்துவக் கழிவுகள் என அதிகளவில் குப்பைகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே அப்பகுதி மக்கள் சாலையில் தடுப்பு அமைத்து குப்பை கொட்டக் கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழ்கிறது. முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுயபரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு முதற்கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறும்போது, ஓசூர் ஊழியர் மற்றும் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் லாரி டிரைவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி தொடர்ந்து நீடிக்கிறது என்றார்.