
சென்னை:
அதிமுகவில் தற்போது மூன்றாவது அணியை உருவாக்கி செயல்பட்டு வரும் தினகரன் அணிக்கு வெறும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கெனவே தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர். தினகரனும் ஒதுங்கி இருப்பதாக கூறினார். ஆனால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் தான் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக அறிவித்தார். மேலும் தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என கூறினார்.
இதையடுத்து சசிகலாவை சிறையில் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் 60 நாட்கள் அமைதியாக இருக்கப்போவதாகவும், அதற்குள் அதிமுக அணிகள் ஒன்றிணையவில்லை என்றால் தான் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் கூறினார். ஆனால் அதிமுக அமைச்சர்கள் அவரை மீண்டும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். அவர் ஒதுங்கி இருப்பது நல்லது என அறிவுறுத்தினர். இதனையடுத்து தினகரனை வரிசையாக எம்எல்ஏக்கள் சந்தித்தவாறு இருந்தனர். இதனால் அதிமுகவில் மூன்றாவது அணி உருவானது.
தினகரனை சந்திக்கும் எம்எல்ஏக்கள் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் எடப்பாடி அணி சற்று கலக்கமடைந்தது. இறுதியாக 33 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர் என கூறப்பட்டது. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுடன் பேசினார்.
இந்தக் கூட்டத்துக்கு தினகரனை சந்திக்க சென்ற எம்எல்ஏக்களும் வந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏ.,க்களிடம் பேசி அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டார்.
உங்களுடைய தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தருகிறேன் ஆனால் அமைச்சர் பதவி குறித்து என்னால் எந்த உறுதியும் அளிக்க முடியாது. அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏ.,க்களிடம் உருக்கமாகக் கூறினாராம். இதற்கு எம்எல்ஏ.,க்களும் செவி சாய்த்தனராம்.
இதை அடுத்து, ஆட்சிக்கு எதிராக தினகரன் செயல்பட இருந்தார். நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என எடப்பாடியிடம் உறுதி அளித்தனராம். இதன் மூலம் தற்போது தினகரன் அணியில் ஐந்து எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதாக அதிமுக., வட்டாரத்தில் பேசப்படுகிறது.


