
சென்னை:
ஜெ.தீபாவின் சார்பில் அவரது கையெழுத்துடன் கூடிய புகார் மனு ஒன்று செவ்வாய்க்கிழமை நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. தீபாவின் சார்பில் செய்தித் தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் என்பவர் புகார் மனுவை நேரில் வந்து கொடுத்துச் சென்றார்.
அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எனது சகோதரர் தீபக் அழைத்ததின் பேரில், நான் எனது அத்தை ஜெயலலிதா வீட்டிற்கு சென்றேன். என்னுடன் எனது ஆதரவாளர்கள் ராஜா, ராமச்சந்திரன், கார்த்திக், பாலாஜி உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். என்னுடன் பத்திரிகை நிருபர்களும் வந்திருந்தார்கள்.
டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில், அவரது ஆதரவாளர்கள் எங்களை அடித்து வெளியே தள்ளினார்கள். எங்களுடன் வந்த பத்திரிகை நிருபர்களும் தாக்கப்பட்டனர். கோதண்டராமன் என்பவரும் அவர்களுடன் இருந்த மேலும் 6 நபர்களும் எங்களை தாக்கினார்கள். என்னை வரவழைத்த தீபக் துணையோடு டி.டி.வி. தினகரனின் தூண்டுதலின்பேரில் எங்கள் மீது தாக்குதல் நடந்தது. எங்களை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். – என்று கூறப் பட்டிருந்தது.
முன்னதாக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு அவரது அண்ணன் மகள் தீபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சென்றார். அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் சென்றனர். அப்போது ஜெயலலிதா வீட்டில் தீபாவின் தம்பி தீபக் மற்றும் சிலருடன் ஏற்பட்ட மோதலில் தீபாவும், அவரது கணவர் மாதவனும், அவரது ஆதரவாளர்களும் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக புகார் கூறப்பட்டது. தீபாவும் மாதவனும் ஜெயலலிதா வீட்டு முன்பு நீண்ட நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர். போலீசார் சமாதானப் படுத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாதவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்தப் புகார் மனுவில், தீபாவுக்கும் தனக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் ஜெயலலிதா வீட்டில் தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.



