
கோவை:
மே மாதம் 9ம் தேதி முதல் தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன், கோவையில் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நாளை கோல்கத்தா அழைத்துச் செல்லப் படுவார் என்று தெரிகிறது.
முன்னதாக, கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனின் பதவிக் காலம் அவர் தலைமறைவாக இருந்த காலத்தில் நிறைவு பெற்றது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் சிறைத் தண்டனை பெற்ற முதல் உயர் நீதிமன்ற நீதிபதி என்ற சாதனையுடன், தலைமறைவாக இருக்கும்போது பணி ஓய்வு பெற்ற நீதிபதி எனவும் பெயர் கிடைத்தது நீதிபதி கர்ணனுக்கு. ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த கர்ணன், தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த போது, சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதனால், உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்தது. இதில், நீதிபதி கர்ணன் மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டன.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த நீதிபதி கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக் காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேல் தலைமறைவாக இருந்த கர்ணனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று கோவையில் பிடிபட்டார்.



