
சென்னை:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது “அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கோரியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன எனவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, “தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் இல்லை என்று நிருபித்தால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்” என அதிரடியாக பேசினார்.
இந்த சூழ்நிலையில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்தும், பாலில் கலப்படம் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜுன் -19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று (19.06.2017) பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில் கடந்த 05.08.2011முதல் 31.05.2017வரை தமிழகம் முழுவதும் சுமார் 886பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187பால் மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிருபணமாகவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அவர்களின் பதில் மனு உறுதி செய்துள்ளது. அப்படியானால் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே நாங்கள் (பால் முகவர்கள்) மனிதாபிமானமிக்கவர்கள் என்பதால் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுகின்ற வகையில் தனது “அமைச்சர் பதவியை மட்டும் உடனடியாக ராஜினாமா செய்தால் போதும்” என்பதை “அன்போடு” தெரிவித்துக் கொள்வதோடு இனியாவது ஆதாரமற்ற தகவல்களை பொத்தாம் பொதுவாக பேசாமல் தனது பொறுப்பை உணர்ந்து பேசிட வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்… என்று கோரியுள்ளார்.



