ஆரியங்காவு பாலருவிக்கு செல்ல வனத்துறை தடை

உள்ளூர் செய்திகள்

palaruvi வனவிலங்குகள் நடமாட்டம் எதிரொலியாக ஆரியங்காவு பாலருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

 கேரள மாநிலம் ஆரியங்காவில் பாலருவி உள்ளது. இங்கு எப்போதும் தண்ணீர் விழும். இதனால் தினமும் அங்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள். குறிப்பாக குற்றாலம் சீசன் காலங்களில் பாலருவியில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது போதிய மழை இல்லாததால் பாலருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து கேரள வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, தற்போது பாலருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. மேலும் கோடை காலம் என்பதால் வனப்பகுதியிலும் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக பாலருவிக்கு வரும் சூழ்நிலை உள்ளது. இந்த சமயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்தால் அவர்களுக்கு ஆபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது.
அதனை கருத்தில் கொண்டே பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்கள் வரை பாலருவிக்கு செல்லவோ, அருவியில் குளிக்கவோ யாரும் செல்லக்கூடாது. மே மாதம் கடைசியில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழையை பொறுத்துதான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.