ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலைக் கருவூலத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பாதுகாப்புப் பெட்டக அறையைத் திறந்து, 12 பெட்டிகளை வெளியே தூக்கிச் சென்று ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தையொட்டி சார்நிலைக் கருவூலம் உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிச் சென்றுள்ளார். சனிக்கிழமை காலை அலுவலகத்தை துப்புரவு செய்ய, பணியாளர் வந்தபோது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து அலுவலர்களுக்கு துப்புரவு பணியாளர் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் போலீஸார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் அலுவலக மரக்கதவை உடைத்து உள்ளே சென்று பாதுகாப்பு பெட்டக அறையை உடைத்து நீதிமன்றங்களிலிருந்து கொண்டு வந்து பாதுகாப்பாக சீலிடப்பட்டு வைத்திருந்த 6 பெட்டிகள், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பாதுகாப்பாக சீலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த 5 பெட்டிகள் மற்றும் சார்நிலை கருவூலத்திற்குச் சொந்தமான ஒரு பெட்டி ஆகியவற்றை, அலுவலகத்தின் சுற்றுச் சுவருக்குப் பின்னால் தூக்கிச் சென்று உடைத்துள்ளனர். பின்னர். அதிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணம் முதலியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த வந்த சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.சி.வெள்ளையன் ஆய்வு நடத்தினார். சம்பவ இடத்தில் விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வந்து அது ரயில் நிலையம் வரை ஓடிச் சென்றது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள சார்நிலை கருவூலங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாய் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறினர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் சார் நிலை கருவூலக் கதவை உடைத்து ரூ.1 கோடி நகை பணம் கொள்ளை
