
பொது இடங்களில் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆண், பெண் காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வழியின்றி மிகவும் அவதிப்பட்டுவருகின்றனர்.
அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், கழிவறையுடன் கூடிய பிரத்யேக வாகனங்களை கோவை மாநகர காவல்துறைக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனங்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், ஆயுதப்படை உதவி ஆணையர் சிற்றரசுவிடம் நேற்று ஒப்படைத்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு தலா ஒரு வேன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண் காவலர்களுக்கான வேனில் 5 கழிவறைகளும், பெண் காவலர்களுக்கான வேனில் 4 கழிவறைகளும், ஒரு உடைமாற்றும் அறையும் உள்ளன.
பெண் காவலருக்கான வேனில் இரு வெஸ்டர்ன் டாய்லெட்கள், 2 இண்டியன் டாய்லெட்கள். ஒரு உடை மாற்றும் அறை உள்ளது. ஆண் காவலருக்கான வேனில் மூன்று வெஸ்டர்ன், இரு இண்டியன் டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வேனின் மதிப்பு ரூ.23 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஆகும். பொது இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பயன்படுத்துவதற்கு இந்த வேன் பயனுள்ளதாக இருக்கும். இதில் போதியளவில் தண்ணீர் வசதி உள்ளது’ என்றனர்.