
தயவுசெய்து விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதையும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் இணைத்து பேச வேண்டாம் என்று குஷ்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நடிகர் விவேக்கிற்கு இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஞ்சியோ சிகிச்சைக்கு பின்னர் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். தற்போது விவேக்கிற்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட விவேக், ”எல்லோரும் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதும், அவர் சொன்ன அறிவுறுத்தலும் நேற்றைய தினம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகின.
இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதால், அவர் நேற்றைய தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் இன்றைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதால் மக்களிடையே ஒருவித அச்சம் நிலைவியது. இது ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து நடிகையும், ஆயிரம்விளக்கு பாஜக வேட்பாளருமான குஷ்பு, ”தயவுசெய்து விவேக் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் இணைத்து பேச வேண்டாம்.
இதற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். தயவுசெய்து நீங்கள் சென்று தடுப்பூசி போடுங்கள். வதந்திகள் மற்றும் சுய அனுமானங்களால் நிலைமையை திசைதிருப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
Please do not link #Vivek getting vaccinated yesterday and having an attack today. It has nothing to do with each other. Let doctors do their duty. Please go and get vaccinated if you are eligible. Do not get swayed by rumours n self assumptions. #fightcovid #GetVaccinated
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 16, 2021