தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்கள் மேற்படிப்பு பயில ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கென்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறப்புப் பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றது. இச்சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகள் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் கல்வியில் ஆர்வமூட்டப்பட்டு முறைசார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றார்கள்.
இதுவரை திட்டத்தின் மூலம் 5,238 குழந்தைகள் முறைசார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு முறைசார்ந்த பள்ளிகளில் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்று 10-ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி அடைந்து பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் மூலம் மாத ஊக்கத்தொகை ரூ.500 வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே, திட்டத்தில் பயின்று முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்சமயம் மேல்படிப்பு படிக்கும் குழந்தைகள் இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித் துள்ளார்.