சென்னை: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் டிராபிக் ராமசாமி கொடுத்த புகார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர் அழகப்பா சாலையில் காரில் சென்றபோது, அங்கு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக டிராபிக் ராமசாமி சாலையை மறித்தபடி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்ததாராம். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகக் கூறி டிராபிக் ராமசாமியை சாலையின் ஓரத்தில் நின்று பேட்டியளிக்குமாறு வீரமணி கூறியதாகவும், அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, டிராபிக் ராமசாமி தனது காரை சேதப்படுத்தி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி புகார் செய்தார். இதேபோல, டிராபிக் ராமசாமியும் புகார் அளித்தார். வீரமணி அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் செய்து டிராபிக் ராமசாமியை வியாழக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதுபோல், ராமசாமி அளித்த புகாரின் பேரிலும் சட்டவிரோதமாக கூடியதாகவும், தாக்கியதாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் வேப்பேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், வழக்கில் அடையாளம் தெரியாத நபரே, டிராபிக் ராமசாமியிடம் தகராறு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், வேப்பேரி டாக்டர் அழகப்பா சாலையில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்தவர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே வேப்பேரி காவல் அலுவலகத்துக்கு நேற்று சென்ற லாரி உரிமையாளர்கள் சிலர், டிராபிக் ராமசாமி கைது விவகாரத்தில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பூச்செண்டுடன் வந்தது குறிபிடத் தக்கது.
டிராபிக் ராமசாமி கொடுத்த புகார்: ‘அடையாளம் தெரியாத நபர்’ மீது வழக்கு பதிவு
Published:

