பதவி போன 18 பேருக்கு ‘முதல்வர் கனவை’ மடைமாற்றி விட்ட ’பலே’ டிடிவி தினகரன்!

Published:

முதல்வர் ஆகும் ஆசையில் ஆர்.கே.நகரில் புகுந்தார் டிடிவி தினகரன். இப்போது தனது கனவைக் கலைத்துக் கொண்டு திடீர் பல்டி அடித்துள்ளார். பதவி போன 18 பேர் ‘அந்த’ கனவில் மிதந்து கொண்டிருக்கக் காரணம் ஆகிவிட்டார் தினகரன்!

எப்படியும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீர்வது என்ற கனவுடன் ஆர்கே நகர் களத்தில் குதித்து வெற்றி பெற்று சட்டப் பேரவையில் அடியெடுத்து வைத்த தினகரன், அதற்கான வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்யத் துவங்கியுள்ளார். அதிமுக., என்ற கட்சி தன் வசம் வந்துவிடும் என்றும், இப்போது அதிமுக.,வில் இருப்பவர்கள் திறமையற்றவர்கள், ஆள்வதற்குத் தகுதியில்லாதவர்கள் என்றும் கருத்துகளைப் பரப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அதன் முதற்கட்டமாக, மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என ஒன்றைத் தொடங்கி தனது சொந்த மண்ணில் களம் பதித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் பேசிவரும் டிடிவி தினகரன், நேற்றைய கூட்டத்தில் தனது ஆதரவாளர் ஒருவரை முதல்வராக்குவேன் என்று கூறி 18 பேரையும் முதல்வர் கனவில் திளைக்க வைத்துள்ளார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேர்தல் நடந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எதிரணியில் உள்ள 6 பேரை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்தாலும் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி, மாற்று யோசனையை முன்வைத்திருக்கிறார்.

நான் முதல்வராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. என்னோடு துணையாக நின்ற 18 தியாகிகளில் ஒருவரை நான் முதல்வர் ஆக்குவேன். மீண்டும் தேர்தல் வந்தால், பலருக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்காது. எனவே மீண்டும் தேர்தல் வர வேண்டாம் என நினைக்கும் எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் மனம் திருந்தி வரலாம் என்று கூறியுள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்  படுவதாகவும், இந்த வழக்கில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பே வரும் என்றும் தினகரன் கூறிவருகிறார்.

ஆனால், உண்மையில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் பலரும், அதிமுக., என்ற அடையாளத்தையே விரும்புகின்றனர். ஆனால், தினகரன் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறது அதிமுக. இதனால் பெரும் மனக் குழப்பத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு மன தைரியத்தையும் தன்னுடன் இருக்க வேண்டியதன் ஆசையையும் அவசியத்தையும் அளிக்கும் முயற்சியில் தினகரன் விசுவாசிகள் ஈடுபட்டுள்ளனர். அதனால்தான் 18 பேரை தியாகிகள் என்ற அடைமொழியுடன், அவர்களில் ஒருவர் முதல்வர் என்ற கனவை விதைத்துள்ளார் தினகரன்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

மேலும், தினகரன் பக்கம் உள்ள அந்த 18 எம்எல்ஏக்களில் 10 பேர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி பக்கம் தாவத் தயாராக உள்ளனர். இதற்கான  பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும்  நிலையில் அதனை தடுக்கும் விதமாகவே  தினகரன் இவ்வாறு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே தினகரனை அரசியல் ரீதியாக மட்டுப் படுத்தவும், தினகரனின் புரட்சிப் பயணத்தை தடுக்கவும் அமலாக்கத்துறை மூலம் திட்டம் தயாராகி வருவதாகக் கூறப் படுகிறது. இரட்டை இலை மீட்பில் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, ஹவாலா  பணம் கொண்டுவரப்பட்ட வழக்கு என தினகரனை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாம்.

இருப்பினும், தினகரனின் பேச்சை எவரும் நம்பத் தயாராக இல்லை. ஆர்.கே.நகரில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறி, வேறு யோசனையை முன் வைத்தார். பின்னர் திடிரென்று தானே போட்டி என்று அறிவித்தார். இதே போல்,  நான் கூறும் 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களுடன் இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்று இப்போது கூறி வருகிறார். அவரது பேச்சு நம்பகத் தன்மை அற்றது என்றே அதிமுக.,வினர் நினைக்கின்றனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்நிலையில் அந்த 18 பேர் மட்டும் முதல்வர் கனவில் மிதந்து  கொண்டு, அந்த வாய்ப்பு தங்களுக்கு வருமா ஏன்று ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களிடம் செல்வதாக வதந்தி மட்டும் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img