அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் திங்கள்கிழமை இன்று இரவு 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயம் அடைந்தனர். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி(45) அங்குள்ள முருகன் கோயிலில் அர்ச்சராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கு, உறவினர்களான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பகுதியைச் சேர்ந்த கிட்டு என்ற கிருஷ்ணன்(45), அவரது நண்பர்கள் 5 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விருந்தினர்களாக வந்து தங்கியிருந்தனராம். பின்னர் இங்கிருந்து ஒரு வாடகைக் காரில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலிக்குத் திரும்பியுள்ளனர். அந்தக் காரை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சேவுகராஜன்(35) என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் சென்ற கார், அருப்புக்கோட்டையை அடுத்த சுக்கிலநத்தம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் கிட்டு என்ற கிருஷ்ணன்(45), அவரது நண்பர்களான இசக்கிமுத்து(42), மணிகண்டன்(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த பாலமுருகன்(32), ராமு(36) ஓட்டுநர் சேவுகராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு உடனே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதி நெல்லையைச் சேர்ந்த 3 பேர் பலி
