ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வளர்மதி ஜெயலலிதாவிடம் வாழ்த்து

உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார். அவர் நேற்று இரவு 7.10 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து தாம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைக் காட்டி வாழ்த்து பெற்றார். இது குறித்து அ.தி.மு.க. வெளியிட்ட செய்திக் குறிப்பு: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது, திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, அ.தி.மு.க. மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினரும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளருமான ப.குமார் எம்.பி., திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான ஆர்.மனோகரன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.