மதுரை அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம்

உள்ளூர் செய்திகள்

  மதுரை: மதுரை அருகே அ.தி.மு,க., பஞ்சாயத்துத் தலைவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ள கார்சேரி கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் கருப்பசாமி (62) அ.தி.மு.க.க் காரரான அவர், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கார்சேரியில் பொது நடைபாதையில் கட்டப்பட்ட வீடு குறித்து பிரச்னை எழுந்தது. இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதில், அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடந்த 26ஆம்தேதி கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஊழியர்கள் முன்னிலையில் அந்த வீடுகள் அகற்றப்பட்டன. வீடு அகற்றப்பட்டதற்கு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நினைத்தனர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நேற்று மாலை கருப்பசாமியின் வீடு அருகே பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டியது. மேலும், கருப்பசாமியின் மகன் வீரமணியையும் அந்த கும்பல் கொல்ல முயன்றது. ஆனால் அவர் தப்பிவிட்டார். பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடி கருப்பசாமி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிலைமான் போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.