பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவர் 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
சாமானியனுக்கு ஒரு சட்டம் விஐபிக்களுக்கு ஒரு சட்டமா? என நீதிமன்றம் எஸ்.வி சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் தமிழக அரசு மற்றும் காவல்துறை எஸ்.வி சேகரை இதுவரை கைது செய்யவில்லை.
நீதிமன்றம் முன் ஜாமின் மறுத்தும் காவல்துறை எஸ்.வி சேகரை ஏன் கைது செய்யவில்லை என சமூக வலைதளங்களில் கேள்வி எழும் போது அவர் தலைமறைவாக உள்ளதாக சிலர் கூறினர்.
ஆனால் நான் தலைமறைவாகல்லாம் இல்லை சென்னையில் தான் இருக்கேன் என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்பதை காட்டும் விதமாக எஸ்.வி சேகர் நேற்று அடையாறில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனுடன் இருக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் முன் ஜாமி மறுத்த ஒரு நபருடன் மத்திய அமைச்சர் கை குலுக்கி சிரிப்பது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.



