
சென்னை: பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா, தான் சார்ந்த ஹிந்து மத மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பி வருகிறார். அது வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும், அவரைக் கைது செய்து மன நல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறி, போலீஸில் புகார் அளிக்கப் பட்டது. அந்தப் புகார் குறித்து இன்று அளிக்கப்பட்ட மனு மீது விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போலீஸார் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
ஹெச்.ராஜா, தான் சார்ந்த ஹிந்து மத உரிமைக்காகவும், தான் சார்ந்த சமூக உரிமைக்காகவும் அவ்வப்போது கருத்துகளைத் தெரிவித்து வருவதுண்டு. இந்து தெய்வங்களை இழிவுபடுத்துதல், கிறிஸ்துவ மதமாற்றம், பன்றிக்குப் பூணூல் போடுதல், பூணூல் அறுப்பு, கொலைவெறித் தாக்குதலில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை துன்புறுத்துதல் என்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் சிலர் செய்யும் செய்கைகளை கண்டித்து தனது டிவிட்டர் பதிவுகளில் கருத்து வெளியிட்டு வந்தார். இவை குறித்து மேடைகளிலும் பேசி வருகிறார். இவற்றை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாத எதிர் அமைப்பினர், சாதீய ரீதியான தாக்குதல்களைத் தொடுத்து வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் பெரியார் சிலை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்ததாகக் கூறி, அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. இந்தப் பின்னணியில், ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரி சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்று கொடுக்கப் பட்டது.
மேலும் சென்னை காவல் துறை ஆணையரிடமும் இது போன்ற புகார் கொடுக்கப் பட்டது. அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால், அதன் பேரில் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்று கூறப் படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் ஹெச்.ராஜா பேசி வருவதால், பொது அமைதிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நபர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஹெச்.ராஜாவை கைது செய்து உரிய மனநல மருத்துவரின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரி மார்ச் 7ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், சம்மந்தப்பட்ட காவல் துறையினரிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



