
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மணப்பாறை பகுதியில் ரயில் பாதை பராமரிப்பால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
திண்டுக்கல் – திருச்சி பாதையில் பராமரிப்பு பணி என்பதால் இன்று ரயில்கள் கரூர் வழியாகச் செல்லும் என்று நேற்றே அறிவிக்கப் பட்டிருந்ததாம். இந்நிலையில், மதுரைக்கு வந்து திருச்சி வழியாக சென்னை செல்ல வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் திண்டுக்கல்லிலேயே சுமார் 1 மணி நேரம் நிறுத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து, திண்டுக்கல் கரூர் பாதையில் உள்ள எரியோடு ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்ட ரயில், 4.10 மணி அளவில்தான் எரியோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதனால் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் வசதி இன்றி அவதிப் பட்டனர்.

மேலும், அடுத்த ரயில்களுக்கு தொடர்ந்து செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் மன அழுத்தத்துக்கு ஆளாகினர். சென்னை செண்ட்ரலில் இருந்து ஹவுரா விரைவு வண்டியில் இன்று இரவு செல்ல முன் பதிவு செய்திருந்தவர்கள், இந்த மூன்று மணி நேர தாமதத்தால் என்ன செய்வது என்று பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாயினர். ரயில் தாமதத்தால் தங்களால் குறிப்பிட்ட விரைவு ரயிலில் பயணிக்க இயலாத சூழல் ஏற்பட்டு விடும் என்றும் அதற்கு மாற்று ஏற்பாடை ரயில்வே நிலைய அதிகாரிகளும் ரயில்வே துறையும் தான் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.



