சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக ஆளுநர் உறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் கூறினார் மு.க.ஸ்டாலின்!
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை ஆளுநரை சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இன்று தமிழக ஆளுநரை சந்தித்து அனைத்துக் கட்சி சார்பில் இது குறித்து தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.
இது குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வரிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. எனவே ஆளுநராக இருக்கும் நீங்கள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியுமா என்று இந்த சந்திப்பின் போது கேட்டதற்கு, நிச்சயமாக உங்கள் உணர்வை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எனவே பிரதமருடன் உங்களது சந்திப்பு நிகழ ஏற்பாடுகளை செய்வேன் என்று ஆளுநர் உறுதி அளித்தார் எனக் கூறினார் ஸ்டாலின்.




