செங்கோட்டை: நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடைக் காலம் என்றாலும், திடீரெனப் பெய்து வரும் மழையினால், வெப்பம் குறைந்து குளு குளு வெனக் காட்சி அளிக்கிறது குற்றாலம் பகுதி!
வெப்ப சலனத்தால் தமிழகத்தின் கடலோர, உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, அம்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இன்றும் மதிய நேரத்தில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் நேற்றே குற்றாலத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். நாளை சனி மற்றும் மறுநாள் ஞாயிறு என்பதால், மேலும் பலர் குற்றாலத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியிலுள்ள கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்