
ஆரோக்கிய பந்தங்கள்
– ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
கோபுலு தன் வீட்டு ஹாலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டிருந்தபோது தினசரி காலெண்டரில் சித்திரை 1 என்று காட்டியது.
கோபுலுவின் மனைவி சுமி காலையில் இருந்து பரபரப்பாய் சுழன்று கொண்டிருந்தாள். அழகான வண்ணங்களால் தீட்டிய ஓவியம் போன்ற கோலம் வாசலில் அழகாய் சிரித்துக் கொண்டே புத்தாண்டையும், அனைவரையும் ஒன்றாகவே வரவேற்றது.
உள்ளேயோ திருத்தமான இழைக் கோலமும் சுமியின் முகத்ததினை ஒத்ததாய் ஜொலித்தது.
கோபுலுவை மாவிலை எடுத்து வரச் செய்து அதை நேர்த்தியாக நிலைப்படிகளில் சுமி கட்டினாள். பின்னர் முழு மூச்சுடன் அறுசுவை உணவு சமைக்க ஆயத்தமானாள்.
சுமியின் சுறுசுறுப்பில் வியந்த கோபுலு , “சுமி, நீ ஏன் இவ்வளவு இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாய்? எத்தனை மணிக்கு வரப்போகிறார்கள், உனதருமை பந்தங்கள்?” என்று கேட்டவுடன், அவர்கள் வரும்போது வரட்டும், நாம் ரெடியாய் இருப்போம்”, என்ற பதிலே அவருக்கு கிடைத்தது.
அருமையான, சுவையான பண்டங்கள் ஒவ்வொன்றும் செய்து பூஜையறையில் வைப்பதுமாய் இருந்தாள், சுமி.
மணி பத்தரை ஆனது. முதல் கார் அவர்கள் வீட்டை வந்தடைந்தது. பரபரப்பானாள் சுமி. காரில் இருந்து இறங்கிய வினிதா ஓடி வந்து பெரியம்மா என்று சுமியை கட்டிக்கொண்டாள். சுமியும் அன்பினில் கரைந்தாள். தன்னை சுதாரித்துக் கொண்டவளாய் தன் மைத்துனனையும், அவன் மனைவியையும் வரவேற்றாள்.
அடுத்த பத்து நிமிடங்களில் வந்த இரண்டாவது காரிலிருந்து கடைசி மைத்துனன் தன் குடும்பத்தாருடன் ஆஜரானான். அவனின் பையன் ரிஷி வட நாட்டில் படிப்பவன், தன் பெரியப்பாக்களையும், பெரியம்மாக்களையும் காலைத் தொட்டு வணங்கினான்.
அவர்களின் வருகையைத் தொடர்ந்து சுமி வீட்டுக்காரர்களின் வருகைப் பதிவானது, அந்த இல்லத்தில்.
அனைவரும் ஒன்று கூடி பிரார்தித்து, குடும்ப வழக்கப்படி பூஜைகள் செய்து, அற்புதமான அறுசுவை விருந்தை உண்டு மகிழ்ந்தனர். சித்திரைத் திங்களை பாரம்பரியத்துடனும், அழகுடனும் பாங்காக கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிறியவர்களும் நவீன விஷயங்களை பெரியவர்களுக்கு விளக்கினர். பெண்களும் பேசிக் கொண்டே வீட்டினை சுத்தம் செய்து விட்டு அருமையாய் பேசிக் கொண்டிருந்தனர்.
நேரம் போனதே தெரியவில்லை. பின்னர், சுவையான டிகிரி காப்பியுடன் அவர்களின் சந்திப்பு நிறைவடைந்தது. ஒவ்வொருவராய் விடைப் பெற்று சென்றனர்.
பொறுமையாய் காலையில் இருந்து மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயங்களை கோபுலு, சுமியிடம் கேட்டு விட தீர்மானித்தார்.
“சுமி, கை ஒழியாமல் காலையில் இருந்து வேலை செய்து, விருந்து கொடுத்தாயே, நம்மைப் பற்றி அவர்கள் புறமும் தானே பேசுகிறார்கள்!”, என்றார், அவர். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சுமி, சுதாரித்துக் கொண்டே , ” நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையை சமாளிக்கும் திறனும் ஒவ்வொருவரிடமும் உண்டு. இன்றைய விருந்தில் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவையே ஆறு வகைச் சுவையாய் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்காகவே ஒன்றாக சேர்த்தோம். அதே மாதிரியே, பல மனங்கள் கொண்ட மனிதர்களின் பங்கேற்பால் மனதும் கொஞ்ச நேரத்திற்காகவாது ஆரோக்கியமாய் இருக்கும் அல்லவா! அதுவே போதும், அதுவே வேண்டும்! அதுவே விழாக்களின் சாரம். இவ்வாறான கொண்டாட்டங்கள் தொடர நான் எப்பொழுதும் தயார் தான். நாம் பெற்ற பையன் தொலைத்தூரம் சென்ற ஏக்கத்தையும் நாம் மறக்க முடியும். நம் சொந்தங்களும் இங்கு இருக்கும் வரையுமே இது சாத்தியம் என்பதாலும் நம்மால் முடிந்தவரை செய்வோமே” என்று மூச்சு விடாமல் கூறி முடித்தாள்.
இடைவிடாது வாசலில் காலிங் பெல்லின் சப்தம் கேட்டவுடன் தான், கோபுலு சுயநினைவுக்கே வந்தார். தான் சென்ற வருடத்தின் நிலைவலைகளில் மூழ்கியதை உணர்ந்தார்.
தினமும் சாப்பாடு கொண்டு வருபவர் தான் வந்திருந்தார். ” சார், இன்னிக்கு புத்தாண்டாய் இருப்பதால் அறுசுவை உணவு கொண்டி வந்திருக்கேன்”, என்றார்.
சுமியும் தன் நாட்டுப் பெண்ணின் பிரசவத்திற்காக அயல்நாடு சென்றுள்ளாள். அவர்தம் பந்தங்களும் வேறு ஊருக்கு குடிபெயர்ந்து விட்டனர். இந்நிலையில், தனிமையும் அவருக்கு பழக்கமாகியது.
சிறிது நேரத்தில் வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் வர எடுத்துப் பார்த்த கோபுலுவோ அசந்தே தான் போனார். சுமி தன் பையன், நாட்டுப்பெண்ணுடனும், ரிஷி மற்றும் வினிதா தத்தம் பெற்றோருடனும் அறுசுவை உணவுடன், கோபுலுடன் புத்தாண்டை கொண்டாடிய போது, சுமி தன் கட்டை விரலை நிமிர்த்திக் காட்டினாள் கோபுலுக்கு. அதில் தான் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.