காஷ்மீர், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து, தில்லியில் நேற்று நள்ளிரவு பேரணி நடத்தினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் தலைமையில் நடந்த பேரணியில் பிரியங்காவும் கலந்து கொண்டார். அப்போது செல்பி எடுக்க முயன்றவர்களிடம் பிரியங்கா கடுமையாகப் பேசினார்.
உபி.,யில் உன்னாவ் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண்ணை பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜன.10ஆம் தேதி 8வயதுச் சிறுமி ஆசிஃபாவை மர்மநபர்கள் கடத்தி பலாத்காரம் செய்து கொன்றனர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்த இரு சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தில்லியில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடந்தது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து தில்லி இந்தியா கேட் வரையில் நடந்த பேரணியில் ராகுல் தலைமை தாங்கினார். சோனியா, பிரியங்கா , ராபர்ட் வத்ரா, அவரின் 15வயது மகள், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
இந்த அமைதிப் பேரணியின் போது சிலர் பிரியங்காவுடனும் ராகுல் காந்தியுடனும் செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் பிரியங்கா கடுப்பானார். கடுங் கோபத்தில் செல்ஃபி எடுக்க முயன்றவர்களை சத்தம் போட்டு சீறினார். ‘நாம் எதற்காக இங்கே கூடி இருக்கிறோம், என்ன காரணத்துக்காக கூடி இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு இப்படி ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டும், சத்தம் போட்டுக் கொண்டும் இருக்கிறீர்களே.. நீங்கள் வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். இது செல்ஃபி எடுக்கும் நேரமா என சிந்தியுங்கள். எதற்காக இந்த பேரணி என்பதை உணர்ந்து செயல்படுங்கள்’ எனக் கத்தித் தீர்த்தார். அவர் இவ்வாறு கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த ஊடகத்தினர் சிலர், வழக்கம் போல் பேட்டி எடுக்க முயல, அவர்களிடமும் பிரியங்கா கடுமையாக சீறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் நடத்தப்பட்ட இந்த அமைதிப் பேரணியில் பலர் மது அருந்திக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு, தள்ளாடியபடி வந்தனர். இதனால் பேரணியில் வந்த பெண்கள் அச்சமடைந்து பாதுகாப்பின்மையை உணர்ந்தனர். பிரியங்கா கோபப் பட்டதற்குக் காரணம் இதுதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களிடம் சமாதானம் செய்தனர்.




