சென்னை: திரையுலகினர் மௌன விரதம் இருந்து ஏற்படுத்த முடியாத பாதிப்பை, கன்னடர் மத்தியில் உளறினாலும் உருப்படியாய் உளறிப் பேசியே சிம்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது ஏப்ரல் 11 – ஒரு டம்ளர் தண்ணீயாச்சும் கொடுக்கும் வேண்டுகோள் வைரலாகி, பல இடங்களில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!
ஏப்.8 ஆம் தேதி தமிழ்த் திரையுலகினர் காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வாய்மூடி ஊமையராய் மௌன விரதம் இருந்தனர். அந்தப் போராட்டத்தில் அஜித், சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. அஜித் வழக்கமாக எந்தப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமல், என் வழி தனி வழி என்று சென்று விடுவார். ஆனால் சிம்பு கலந்து கொள்ளாதது குறித்து, தன்னிலை விளக்கம் அளிக்க முன்வந்தார். செய்தியாளர்களை அழைத்தார். தன் ரசிகர்களையும் அழைத்தார்.
போராட்டத்தில் கலந்து கொள்ள தனக்கு முறையான அழைப்பில்லை என்பதால்தான் தான் கலந்து கொள்ளவில்லை என்றார் சிம்பு. தொடர்ந்து, காவிரி குறித்த விவகாரத்தில் தனக்கு உள்ள கருத்துக்களையும் பதிவு செய்தார். அதில்…
‘காவிரி நீர் விவகாரத்தை அரசியல்வாதிகள்தான் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். அதனை மக்களின் தீர்க்கப் பட வேண்டிய பிரச்னையாகக் கருதாமல் தாங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் செய்வதற்கான ஒரு காரணியாக மட்டுமே பார்த்து வருகிறார்கள். அதனால், அந்தப் பிரச்னையை சுமுகமான முறையில் தீர்க்க முயற்சி செய்வதே இல்லை.
கர்நாடகத்தில் இருப்பவர்கள் யார்? நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள். நம் தாய்மார்கள். ஓர் அம்மா தன் ஒரு குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு, மற்ற குழந்தைக்கு தரமாட்டேன் என்றா சொல்வாள்? நாம் அவர்களிடம் போய், உங்களது தேவைக்குப் போக எஞ்சிய நீரை சரியான நேரத்தில் எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்போமே! அப்படி கேட்டுப் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஆனால், இதை இந்த அரசியல்வாதிகள் செய்வதே இல்லை. தங்களது பிழைப்புக்காக தொடர்ந்து மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இத்தனை நாள் போராட்டம் நடத்தினார்களே… ஏதாவது ஒரு முடிவு கிட்டி இருக்கிறதா? கிட்டியதேயில்லை.
இன்று காவிரி நீர் தர வேண்டும் என்று போராடுகிறோம். இங்கே 2015இல் வெள்ளம் வந்து தெருவெங்கும் ஆறாகத் தண்ணீர் ஓடியதே. அந்தத் தண்ணீரைப் பாதுகாக்க நாம் என்ன ஏற்பாடுகளைச் செய்தோம்? எவ்வளவு தண்ணீரை திறந்து விட்டு வீணாக்கினோம். எவ்வளவு தண்ணீர் வீணாகப் போனது?
எனவே இப்போது நான் நம் கன்னட தாய்மார்களிடம், சகோதரர்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். வரும் ஏப்ரல் 11 ஆம் நாள் கர்நாடகாவில் உள்ள தாய்மார்கள் அனைவரும் தங்களது தமிழ் சகோதரர்களுக்கு 1 டம்ளர் தண்ணீர் கொடுத்து அதை போட்டோ வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். செய்வீர்கள் என்று நம்புகிறேன். அது போதும். இதற்காக நாம் ஏன் நமது கன்னட சகோதரர்களுடன் சண்டையிட வேண்டும்?!
– இப்படி அவர் அளித்த பேட்டி, தமிழர்களின் நெஞ்சை உருக்கியதோ இல்லையோ, கன்னடர்களின் நெஞ்சை உருக்கிவிட்டது.
We like Simbu’s thoughts and views of humanity. We both tamilnadu and karnataka should unite for the solution.#UniteForHumanity #SRT #Simbu #Karnataka #CauveryIssue #simbhu pic.twitter.com/x2WxXmU80H
— Siddesh Kumar H.P. (@siddeshkumar) April 11, 2018
காவிரிக்காக நம்மை பிச்சை எடுக்கச் சொல்கிறார் சிம்பு. நாம் ஏன் பிச்சை எடுக்க வேண்டும், இது நமது உரிமை. உரிமையை மீட்பதற்குப் போராட வேண்டும் என்று தமிழ்நாட்டில் பலர் சிம்புவை கிண்டலடித்து, விமர்சனம் செய்து கொண்டிருக்க, கன்னடர்களோ சிம்புவின் பேச்சால் கவரப் பட்டிருக்கிறார்கள். ரஜினி, கமலை தூக்கி எறிந்துவிட்டு, சிம்புவைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. #uniteforhumanity என்ற ஹேஷ்டேக்குடனான சிம்புவின் வேண்டுகோள் தமிழகத்தில் கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடக மக்கள் அதை பாஸிட்டிவ் கண்ணோட்டத்துடன் வரவேற்றிருக்கிறார்கள்.
இணையத்தில் கர்நாடக மக்களும், கர்நாடக தன்னார்வ இயக்கங்களைச் சேர்ந்த பலரும் ஏப்ரல் 11 அன்று அங்கு வசிக்கும் தமிழ் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் பலருக்கு சிம்புவின் வேண்டுகோளுக்கு இணங்க தண்ணீரை பாட்டில் மற்றும் டம்ளர்களில் அளித்து அதை வீடியோவாக எடுத்து யூ டியூபில் பதிவு செய்திருந்தனர்.
#STR Gains Lot Of Support ✌#UniteForHumanity
Follow Us :- @SwagTamizhaa pic.twitter.com/Co8b718bll
— Swag Tamizha (@SwagTamizhaa) April 11, 2018
கன்னட ரக்ஷ வேதிகா அமைப்பினர், ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் பகுதியில் தமிழக பேருந்துகளை நிறுத்தி, ஓட்டுநர்களுக்கு தண்ணீர் கொடுத்து பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு நீர் அளித்தனர். யுடியூப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் பலர் புகைப்படங்களை வெளியிட்டு இந்த ஹேஷ்டேக்கை பிரபலப் படுத்தியுள்ளனர். காவிரி விவகாரம் இரு மாநில அரசியல்வாதிகள் செய்து வரும் தேர்தலை முன்னிறுத்திய ஏமாற்று அரசியலே என்ற கருத்தும் அதில் பிரதிபலித்தது.