
தூத்துக்குடி: உடன்குடியில் ஸ்டெர்லைட் குறித்து பிரசாரம் செய்தபோது, மோடி குறித்து அவதூறாகப் பேசியதால் வைகோவுக்கு கருப்பு கொடி காட்ட வந்த பா.ஜ.க.வினர், மேலும் ஆத்திரம் அடைந்து வைகோ வாகனத்தின் மீது கல்வீசி தாக்கினர். தொடர்ந்து போலீஸ் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை நெல்லை, செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் இரவு 9.45 மணி அளவில் உடன்குடி சந்தையடி தெரு வழியாக பிரசார வேனில் நின்றவாறு வந்தார்.
ஏற்கெனவே மோடி குறித்து கடுமையாக அவதூறு பரப்பி, மரியாதை இன்றிப் பேசிய வைகோவுக்கு கருப்பு கொடி காட்டும் விதமாக, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் திருநாகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி ஏந்தி நின்றனர். இந்நிலையில் வைகோவிடம் சென்ற போலீஸார், அவரிடம் பாஜக.,வினர் கருப்புக் கொடி ஏந்தி நிற்கும் செய்தியைச் சொல்லி, மாற்றுப் பாதையில் செல்லும் படி கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வைகோ, தாம் திட்டமிட்ட பாதையில் தான் செல்வோம் என்று கூறினார்.
இதை அடுத்து, திட்டமிட்ட பாதையிலேயே வந்த வைகோ, அங்கு பாரதிய ஜனதாவினரை கண்டதும் பிரதமர் நரேந்திர மோடியைப் போல கருப்புக் கொடியை கண்டு பயந்து ஓட மாட்டேன் என பேசினார். இதனால் ஆவேசமடைந்த பாரதிய ஜனதாவினர், பின் வைகோவின் பிரசார வாகனம் முன் நின்றபடி, ‘வைகோ ஒழிக‘ என்று கோஷமிட்டனர்.
இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வைகோ பிரசார வேன் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதனால் வைகோ பிரசார வேனுக்குள் அமர்ந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். பின்னர் சிறிதுநேரம் கழித்து வைகோ வேனில் நின்றவாறு பேசினார்.
அப்போது அவர், இங்கு பா.ஜ.க. வினர் கருப்பு கொடி காட்ட தயராக உள்ளதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நாம் அமைதியாக செல்வோம் என்று கூறி வந்தேன். அவர்கள் கருப்பு கொடி காட்டி விட்டு சென்று இருக்கலாம். என் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். நான் இங்கு ஓட்டு கேட்டு வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளேன்.
பா.ஜ.க.வின் கூட்டத்தில் புகுந்த புல்லுருவிகள் என் மீது கல் வீசினர். இதற்கு நான் பயந்து போக மாட்டேன். நான் ம.தி.மு.க.வை தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் என் மீது எந்த கட்சியினரும் கல்வீசியது கிடையாது. எங்களுடைய கட்சி தொண்டர்களும் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது. பா.ஜ.க.வினரின் கல்வீச்சில் ம.தி.மு.க. மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சங்கொலி சந்திரன், மரியசெல்வம் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது” என்று பேசினார். பின்னர் அவர் உடன்குடி பஜாரில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.
தடியடி சம்பவத்தில் காயம் அடைந்த பாரதிய ஜனதாவினர் 6 பேர் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



