
செங்கல்பட்டு: சென்னை மறைமலை நகரை அடுத்த பெரமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நேற்று மாலை 8 மணிக்கு அஞ்சூர் மகேந்திரா சிட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் மூவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மகேந்திரா சிட்டி கூட்டு சாலையில் சென்னையிலிருந்து மரக்காணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவர்கள் வந்த மோட்டார் பைக் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாவண்யா மற்றும் கணவர் குழந்தை 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது லாவண்யா தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவரும், குழந்தையும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, பொது மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரா சிட்டி தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வண்டலூர் டிஎஸ்பி வளவன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை.
இதனிடையே காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஒரு சிலர் போலீசார் மீது சராமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.
கல்வீச்சில் காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி தலையில் கல் விழுந்ததில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதனிடையே, பலத்த காயமடைந்த எஸ்பியை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
உயிருக்குப் போராடிய லாவண்யாவின் கணவர் மற்றும் குழந்தையை போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று முகூர்த்த நாள் என்பதாலும், விடுமுறைதினம் என்பதாலும் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குக் கிளம்பியவர்கள் இதனால் கடும் அவதிப் பட்டனர்.



