சென்னை: ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்பலோ மருத்துவமனை பதில் அளித்துள்ளது.
ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரி அம்ருதா என்ற பெண் தொடர்ந்த வழக்கில் அப்பலோ பதில் அளித்துள்ளது.
முன்னதாக, ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா என்று கேட்டு உயர் நீதிமன்றம், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏப்.26 (இன்றைக்குள்) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்…
‘‘ஜெயலலிதாவின் உடலை எங்கள் குல வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்ய வேண்டும். எனவே அவரது உடலைத் தோண்டியெடுத்து மத சம்பிரதாயப் படி இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கைகளை வைத்திருந்தார்.
ஆனால், அம்ருதா தாக்கல் செய்த இந்த வழக்கை ஏற்கக்கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அம்ருதாவின் மனுவுக்கு அரசுத் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரனைக்கு வந்தது. மேலும், அதிமுக உறுப்பினரான ஜோசப், ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக், தீபா மற்றும் மகள் என்று கூறிக் கொள்ளும் அம்ருதா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்திருக்கின்றனர் என்றும், எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதனிடையே, ஆர்.கே.நகர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே வழக்கு தொடரப்பட்டதாகவும், டிஎன்ஏ சோதனை தேவையில்லை எனவும் அரசுத் தரப்பு கூறியது. அப்போது அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் மாதிரிகள், ரத்த மாதிரிகள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ரத்த மாதிரிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க கால அவகாசம் தேவை என அப்போலோ தரப்பில் அவகாசம் கேட்டப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இனி இணைப்பு மனுக்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாளைக்குள் (ஏப்.26 வியாழக் கிழமைக்குள்) அப்போலோ நிர்வாகத்திடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், அப்பல்லோ நிர்வாகம் சார்பில் அளிக்கப் பட்ட பதில் மனுவில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளது.