சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தலைமை நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நீதிபதிகள் கடுப்பாகி, அந்த நபரை வெளியேற்ற உத்தரவிட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பிக்கிறது.
இந்நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் தகுதி நீக்கத்தால் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனுதாரர் தேவராஜன் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கக் கூடாது என அவர் முறையீடு செய்தார். தேவராஜன் முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு தரக்கூடாது என தேவராஜன் முறையீடு செய்தார். அப்போது 11 பெரிதா? 18 பெரிதா? என்று தலைமை நீதிபதியிடம் கேள்வி எழுப்பிய அவர், முதலில் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தேவராஜனின் இந்த நடவடிக்கைக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். எம்எல்ஏக்கள் வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு தெரியும் என்றார். ஆனாலும் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார் தேவராஜன். அப்போது வழக்கிற்கு தொடர்பில்லாத ஒருவர் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறினார். இருப்பினும் தேவராஜன், தான் ஒன்றும் தீவிரவாதியில்லை என்றும் வாக்காளர் என்ற முறையில் முறையிட்டதாகவும் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி சிஎஸ்எப்ஐ வீரர்களை அழைத்து தேவராஜனை வெளியேற்ற உத்தரவிட்டார்.




