மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து, காத்திருந்து பெருமானின் அருள் பெற்றனர்.
மதுரை சித்திரைத் திருவிழா தனித்தன்மை கொண்டது. மதுரை நகர மக்களே திரண்டு விழா எடுக்கும் சிறப்பு கொண்டது. கட்டுக் கடங்காத கூட்டம். எங்கு நோக்கினும் அன்பர் வெள்ளம். வைகையில் வராத வெள்ளம் அன்பர்களின் வெள்ளத்தால் மதுரையில் அன்று மனம் குளிரும்.
மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 18ஆம் தேதி, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று மதுரையை அரசாளும் மீனாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இரவு பூப்பல்லக்கில் அம்மனும், சுவாமியும் மாசி வீதிகளில் திருவீதி உலா வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைக் காண சுற்று வட்ட மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். தேரோட்டத்தை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
மாசி வீதிகளில் தேர் ஆடி வருவது கண்டு பலர் பக்திப் பரவசத்தில் முழக்கங்களை எழுப்பினர். திருவிழா காண வந்தவர்களுக்கு பல இடங்களில் அன்பர்கள் பலர் சிற்றுண்டி, குளிர்பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டினர் பலரும் இந்தத் தேரோட்டத்தைக் காண வந்திருந்தனர். அவர்கள் கண்டு களிக்க வசதியாக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது.